“இதெல்லாம் கொஞ்சம் கூட நியாயமே இல்லை..” சொத்துக்காக சித்தப்பாவை இருகம்பியாலே அடித்து கொன்ற அண்ணன் மகன்!

இசக்கிமுத்து, தனது சித்தப்பா என்றும் பாராமல் அருணாச்சலத்தை இரும்பு கம்பியால்
arunachalam
arunachalam Admin
Published on
Updated on
1 min read

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொன்னாக்குடி பகுதியில் சொத்துத் தகராறு காரணமாக சித்தப்பாவை அவரது அண்ணன் மகன் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பொன்னாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி மகன் அருணாச்சலம் (வயது 47). இவருக்கும், இவரது அண்ணன் மாரிமுத்துவின் மகனான இசக்கிமுத்து (வயது 29) என்பவருக்கும் இடையே பூர்வீக சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மீண்டும் இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற இசக்கிமுத்து, தனது சித்தப்பா என்றும் பாராமல் அருணாச்சலத்தை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அருணாச்சலம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முன்னீர்பள்ளம் போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அருணாச்சலத்தை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அருணாச்சலம் பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அருணாச்சலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் சொத்துத் தகராறுதானா? அல்லது வேறு ஏதும் முன்விரோத காரணங்கள் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள கொலையாளி இசக்கிமுத்துவைக் கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சொத்துத் தகராறில் சொந்த சித்தப்பாவையே அடித்துக் கொன்ற இச்சம்பவம் பொன்னாக்குடி கிராமத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com