"10 ஆண்டுகள் வீட்டிற்குள் சிறைப்பட்ட குடும்பம்.." 5 குழந்தைகளுடன் சித்திரவதை அனுபவித்த 'பிரெஞ்சு பெண்!' அடுத்தடுத்து வெளியே வந்த அதிரவைக்கும் சம்பவங்கள்

2014-ல் ஆஸ்திரேலியாவிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அந்தக் குடும்பம் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வந்துள்ளது.
French woman rescued Pakistan
French woman rescued PakistanFrench woman rescued Pakistan
Published on
Updated on
2 min read

பாகிஸ்தானில் உள்ள ஒரு தொலைதூர வீட்டில், தனது ஐந்து குழந்தைகளுடன் பத்தாண்டுக்கும் மேலாக வெளி உலகத் தொடர்பின்றி அடைபட்டுக் கிடந்த பிரெஞ்சுப் பெண் ஒருவர், அவரது மகன்களில் ஒருவர் தப்பிச் சென்று காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து இறுதியாக குடும்பத்திரனார் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அப்பெண்ணின் கணவர், அவர்களை பத்து ஆண்டுகளுக்கு மேலாக வெளி உலகிலிருந்து தனிமைப்படுத்தி வைத்திருந்தபோது, ​​குடும்பத்தினரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாரா என்ற மலைப்பகுதியில், தம்பதியரின் மகன்களில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, குழந்தைகளில் ஒருவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், ஜூன் 18 அன்று அதிகாரிகள் அந்தக் குடும்பத்தின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். வீட்டிற்கு உள்ளே, 54 வயதான சில்வி யாஸ்மினாவும் அவரது ஐந்து குழந்தைகளும் நெரிசலான மற்றும் "மிகவும் பாழடைந்த அறையில்" வசித்து வருவதை அவர்கள் கண்டுள்ளனர். குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு வெளிப்படையான சிராய்ப்புகளும் உடல் காயங்களின் அறிகுறிகளும் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

யாஸ்மினாவும் அவரது குழந்தைகளும் உடனடியாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு, பெஷாவரில் உள்ள ஒரு பெண்கள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பின்னர் காவல்துறையினர், அக்குடும்பம் பிரான்சுக்குத் திரும்ப விரும்புவதாக பிரெஞ்சு தூதரகத்திற்குத் தெரிவித்துள்ளனர். விசாரணையாளர்களிடம் அளித்த வாக்குமூலத்தில், தொடர்ச்சியான துன்புறுத்தல் மற்றும் வன்முறைச் செயல்களில் தனது கணவர் குடும்பத்தைச் சிக்க வைத்ததாக யாஸ்மினா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "எங்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டது. என் கணவர், ஒரு கணவராகவும் என் குழந்தைகளின் தந்தையாகவும் எங்களை முறையாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவர் எங்களை அடித்து, தினமும் எங்கள் வாழ்க்கையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய எதிர்காலம் ஏற்கெனவே பாழாகிவிட்டது என்றும், குழந்தைகளின் எதிர்காலமும் பாழாகிவிடும் என்றும் அவர் உணர்ந்ததாக கூறினார். யாஸ்மினா தனது கணவரை ஒரு "வன்முறையாளர்" என்றும், அவர் குடும்ப உறுப்பினர்களைத் தினமும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாகவும் விவரித்துள்ளார். தானும் தன் குழந்தைகளும் மற்றவர்களுடன் பழகுவதிலிருந்து தடுக்கப்பட்டதாகவும், வெளி உலகத்துடன் தங்களுக்கு மிகக் குறைந்த அல்லது எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் புலனாய்வாளர்களிடம் கூறியதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, 2014-ல் ஆஸ்திரேலியாவிலிருந்து பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்ததிலிருந்து அந்தக் குடும்பம் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் வாழ்ந்து வந்துள்ளது.

அந்தப் பெண்ணின் கூற்றுப்படி, அவர் யாரையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை, அவர்களது இரண்டு மூத்த பிள்ளைகள் படிப்பைத் 5தவறவிட்டுள்ளனர். அதே சமயம் மூன்று இளைய பிள்ளைகள் பாகிஸ்தானில் பிறந்ததால் பள்ளியில் சேரவே இல்லை, என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இடமாற்றத்திற்குப் பிறகு குடும்பத்தின் இரண்டு மூத்த பிள்ளைகளின் கல்வி தடைபட்டதாகவும், பாகிஸ்தானில் பிறந்த மூன்று இளைய பிள்ளைகள் பள்ளியில் ஒருபோதும் சேர்க்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். பாகிஸ்தான் அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்தத் தம்பதியினர் 2003-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் சந்தித்தபோது அவரது கணவர் ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்ததாகக் காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. அந்தக் குடும்பம் 2014 வரை ஆஸ்திரேலியாவில் வசித்து வந்த நிலையில், பின்னர் தங்களது இரண்டு மூத்த பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.

அந்தக் குடும்பம் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்த பிறகு நடந்தவை குறித்து தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது. அதிகாரிகள் ஆதாரங்களைச் சேகரித்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வரும் நிலையில், சந்தேக நபர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com