
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள வாழவந்தி நாடு கிராமத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவியின் தந்தை வாழவந்திநாடு காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு சாப்பாடு செய்து கொடுக்கும் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த (ஆகஸ்ட் 06) ஆம் தேதி வாழவந்திநாடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளரான மோகன் என்பவர் காரில் மாணவியையும் அவரது தந்தையையும் கொல்லிமலையில் இருந்து திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது முள்ளுக்குறிச்சி என்ற பகுதியில் மாணவியின் தந்தை காரில் இருந்து ஒரு அவசர வேலைக்காக இறங்கியுள்ளார். இதனையடுத்து எஸ்.எஸ்.ஐ மற்றும் மாணவியும் தனியாக காரில் சென்று உள்ளனர். அப்போது மாணவியிடம் எஸ்.எஸ்.ஐ பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கத்தி கூச்சல் போட்டுள்ளார். காரின் கண்ணாடிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவியின் சத்தம் வெளியில் யாருக்கும் கேட்காமல் இருந்துள்ளது. பின்னர் சுதாரித்துக் கொண்ட மாணவி நாமக்கல் பகுதியில் காரை விட்டு இறங்கி திண்டுக்கல்லுக்கு பேருந்து ஏறி சென்றுள்ளார்.
திண்டுக்கல்லுக்கு சென்ற மாணவி இது குறித்து தனது தந்தையிடம் தெரிவித்த நிலையில் மாணவியும் தந்தையும் நேற்று இரவு நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளனர்.
மாணவி கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் வேதபிறவி வழக்குப்பதிவு செய்து எஸ்.எஸ்.ஐ மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். கைது செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ மோகன் நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டியை சேர்ந்தவர் என்பதும் திருமணமாகி இரு மகன்கள் உள்ள நிலையில் குடும்பத்துடன் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கல்லூரி மாணவியை காவலர் காரில் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட காவலரை வேலையை விட்டு நீக்கி உரிய தண்டனை அளிக்குமாறு சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவன் உறவினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.