
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜன். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்கு தனது நண்பர்களுடன் புதுச்சேரியில் மிஷன் தெருவில் உள்ள OMG ரெஸ்டோ பாருக்கு சனிக்கிழமை இரவு சென்றுள்ளனர். அப்போது மது அருந்திவிட்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்த ஷாஜனின் நண்பர்கள் சிலர் பாரில் ஏற்கனவே நடனமாடிக் கொண்டிருந்த பெண் மீது விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் கோபமடைந்த அப்பெண்ணின் நண்பர்கள் ஷாஜன் மற்றும் அவரது நண்பர்களை பார் விட்டு வெளியே அனுப்ப கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து பாரில் இருந்த மற்ற நபர்களும் ஷாஜன் மற்றும் அவரது நண்பர்கள் மிகுந்த அட்டகாசம் செய்வதாக சொல்லி அவர்களை வெளியில் அனுப்ப வற்புறுத்தியுள்ளனர். எனவே பாரில் இருந்த பவுன்சர்கள் சிலர் ஷாஜன் மற்றும் அவரது நண்பர்களை பார் விட்டு வெளியேற சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதனை காதில் வாங்காமல் ஷாஜன் மற்றும் அவரது நண்பர்கள் தொடர்ந்து அட்ராசிட்டி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
எனவே பவுன்சர்கள் ஷாஜன் மற்றும் அவரது நண்பர்களை வலுக்கட்டாயமாக பார் விட்டு வெளியேற்ற முயற்சி செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஷாஜனின் நண்பர்கள் பவுன்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பவுன்சர்களில் ஒருவரான அசோக் ராஜா பாரில் இருந்த சமையலறைக்கு சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து வந்த ஷாஜனின் நபரான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மோஷிக் என்பவரை சரமாரியாக குத்தியுள்ளார். இதை பார்த்து தடுக்க சென்ற ஷாஜனை வயிற்று பகுதியில் குத்தியுள்ளார் இதனை பார்த்த பாருக்கு வந்த மற்றவர்கள் மோஷிக் மற்றும் ஷாஜனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் மோஷிக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஷாஜன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அசோக் ராஜாவை கைது செய்துள்ளனர். மேலும் பாரில் பணிபுரிந்து வரும் 10 பவுன்சர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட சென்ற மாணவர்களில் ஒருவர் பாரில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.