“ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்த காவலர்” - ஆணையரிடம் சென்ற புகாரால் ஆத்திரம்.. நிலத்தில் இருந்து மீட்கப்பட்ட மனைவியின் சடலம்!

மௌனிகா அவரது தாய் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்...
Police Constable Murder Case
Police Constable Murder Case
Published on: 
Updated on: 
2 min read

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து, உடலைக் குழி தோண்டிப் புதைத்ததாகக் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மாயமானது தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் 39 வயதுடைய பிரபாகரன். இவர் அரியலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி உள்ள நிலையில் மழையூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் போது அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 24 வயதுடைய மௌனிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.

இதில் கர்ப்பமடைந்த மௌனிகா பிரபாகரனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இதுகுறித்து காவல் ஆணையரிடம் மௌனிகா புகாரளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஆணையர் பிரபாகரனை அழைத்து கண்டிக்கவே அவர் மௌனிக்கவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார். இருப்பினும் மௌனிகா அவரது தாய் வீட்டிலேயே வசித்து வந்த நிலையில் பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இதற்கிடையில் மௌனிகாவிற்கு ஆண் குழந்தை பிறந்து தற்போது சிறுவனுக்கு 7 வயதாகும் நிலையில் ரேஷன் அட்டையில் குழந்தை பெயரை சேர்க்க வேண்டும் என பிரபாகரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகர் இந்த விவகாரத்தில் ஈடுபாடு செலுத்தாத நிலையில் மௌனிகா இது குறித்து மீண்டும் காவல் ஆணையரிடம் புகாரளித்துள்ளார். இதன் காரணமாக பிரபாகர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே திருமண விவகாரத்திலும் மௌனிகா ஆணையரிடம் சென்ற நிலையில் மீண்டும் இவ்வாறு செய்தது பிரபாகருக்கு ஆத்திரம் ஏற்படுத்தியுள்ளது.

எனவே இரண்டாவது மனைவி மௌனிகாவை கொலை செய்ய நினைத்த பிரபாகர் கடந்த (அக் 7) ஆம் தேதி மௌனிகாவுடன் அரியலூருக்குச் சென்றுள்ளார். அங்கு அவருடன் தங்கியிருந்த சமயத்தில் கடந்த (அக் 9) ஆம் தேதி பிரபாகரனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மறுநாள் மனைவி மௌனிகாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆனால், அதன் பின்னர் மௌனிகா திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், மழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மௌனிகா மாயமானது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படியில் அவரது கணவர் பிரபாகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதே சமயம் பிரபாகருக்கு சொந்த நிலத்திற்கு அடுத்துள்ள பட்டா இல்லாத நிலத்தில் மௌனிகாவின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பிரபாகர் குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்து, குழி தோண்டி உடலைப் புதைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்து, பிரபாகரனைக் கைது செய்த போலீசார், நேற்று மாலை அவரைப் பிலாவிடுதி பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அவர் தெரிவித்த இடத்தில் குழி தோண்டி மௌனிகாவின் உடலை முழுமையாக மீட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலராகப் பணியாற்றி வந்தவர், குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்து உடலைப் புதைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com