சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேரு. கூலித்தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியை ஹசீனா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 14 வயதில் ரியாஸ்கான் என்ற மகன் இருந்த நிலையில், அவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவன் படிக்காமல் எப்போது போன் பார்த்து வந்ததாக சொல்லப்படுகிறது.
மேலும், விடுமுறை நாட்களில் கூட வெளியில் செல்லாமல் அதிக நேரம் போனில் மூழ்கி கிடந்துள்ளார். இதன் காரணமாக பெற்றோர் அவரை அவ்வப்போது போன் பார்க்க வேண்டாம் என கண்டித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய ரியாஷ்கான் நீண்ட நேரமாக செல்போனை பயன்படுத்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அவரது தாய் ஹசீனா போன் பார்க்க வேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மாணவன் மன வருத்தத்தில் இருந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் நகர போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்படுத்தியதை தாய் கண்டித்ததைத் தொடர்ந்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம், ஜோதி நகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிறுவனை இழந்த தாய் மற்றும் தந்தை நிலைகுலைந்து கதறி அழும் காட்சி அங்குள்ளவர்களை கண்கலங்க செய்துள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்