“சிவகங்கையில் அடுத்தடுத்து நடந்த கொலைகள்” - அரிவாளால் வெட்டி முகம் சிதைத்து கொல்லப்பட்ட இருவர்.. சாலையில் போராடும் உறவினர்கள்!

கொலைக்கான முழுமையான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது..
Sivaganga Double Murder Case
Sivaganga Double Murder Case
Published on
Updated on
2 min read

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன். இவர் பொள்ளாச்சி அருகே குறிஞ்சி பாளையத்தில் அரசு டாஸ்மாக் பாரை லீசுக்கு எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இவரது நண்பர் சிறுவேலங்குடியைச் சேர்ந்த பூப்பாண்டி. இவர் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெய்வேந்திரன் சமீபத்தில் புதிய எர்டிகா கார் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த காரை நேற்று முன்தினம் சிவகங்கையில் உள்ள ஷோரூமில் சர்வீஸுக்கு விட்டிருந்த நிலையில், பின்னர் காரை எடுத்துக்கொண்டு நண்பர் பூப்பாண்டியுடன் சிவகங்கை அருகே உள்ள பழமலை நகர் கொடிக்கண்மாய் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கு வந்ததாகவும், தெய்வேந்திரன் மற்றும் பூப்பாண்டி ஆகிய இருவரையும் விரட்டி விரட்டி வெட்டி முகத்தை சிதைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

Sivaganga Double Murder Case protest
Sivaganga Double Murder Case protest

இதையடுத்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் போலீசார் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், பில்லூரைச் சேர்ந்த பாலமுருகன், தனராஜ், சந்தோஷ், மாத்தூரைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அளுபிள்ளைதாங்கியைச் சேர்ந்த காளீஸ்வரன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு திரண்ட உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர், கொலைக்கான முழுமையான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதையடுத்து, உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையில் இருந்து ஊர்வலமாக சிவகங்கை அரண்மனைவாசல் பகுதிக்கு வந்தனர். அங்கு இருபுறச் சாலைகளிலும் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் உறவினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, இரட்டைக் கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவரும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com