புனே ரியல் எஸ்டேட் அதிபர் கேதன் அகர்வாலுடன் சியா கோயல் மகிழ்ச்சியாக இல்லை என்ற கருத்தை, அவரது பெற்றோர் கடந்த வியாழக்கிழமை நிராகரித்தனர்.
தனது மகள் திருமணத்தை ரத்து செய்ய அவர் விரும்பியதற்கான எந்த அறிகுறியும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கோயல் அவரது காதலனுடன் ஓடிப்போவதற்குப் பதிலாக, அவரைக் கொலை செய்ய கோயல் தனது காதலன் சேதன் சௌத்ரியுடன் சேர்ந்து சதி செய்ததாகக் காவல்துறை கூறியதைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. தான் கேதனை திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை என்று பெற்றோர்களிடம் தெரிவித்ததாகவும், ஆனால் அவர் திருமண நிச்சயத்தை ரத்து செய்ய விரும்பவில்லை என்றும் கோயல் புலனாய்வாளர்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், கோயலிடமிருந்து எந்தவிதமான மனக்கசப்போ அல்லது தயக்கமோ வெளிப்பட்டதை தாங்கள் ஒருபோதும் கண்டதில்லை என்று அவளுடைய பெற்றோர் கூறினர். "இந்தத் திருமணம் குறித்து சியா ஒருபோதும் அதிருப்தி தெரிவித்ததில்லை. எங்களுக்கு சேத்தனைப் பற்றி எதுவும் தெரியாது. நிச்சயதார்த்தம் நடந்ததிலிருந்து, அவள் கேதனிடம் மட்டுமே பேசினாள்" என்று சியாவின் தாய் தெரிவித்துள்ளார். "சியா திருமணத்தைப் பற்றி தனது அதிருப்தியை ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து, அவள் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தாள். அவள் எப்போதும் கேதனைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். ஏதேனும் தவறாக நடக்கிறது என்று அவர்கள் (கேதனின் பெற்றோர்) எங்களுக்குச் சிறிதளவாவது தெரிவித்திருந்தால், நாங்கள் அவர்களிடம் பேசியிருப்போம்," என்று கோயிலின் தந்தை தெரிவித்தார்.
சியா திருமணத்தை மறுத்திருந்தால், குடும்பத்தினர் அவரது முடிவை ஏற்றுக்கொண்டிருப்பார்கள் என்றும் கேதன் அகர்வாலின் தந்தை தெரிவித்துள்ளார். "அவள் எளிமையாக மறுத்திருக்கலாம்; நாங்கள் உடனடியாகத் திருமணத்தை ரத்து செய்திருப்போம்," என்று அவர் கூறினார். காவல்துறையின் கூற்றுப்படி, ஜூன் 18 அன்று லோகட் கோட்டையிலிருந்து அகர்வாலை சௌத்ரி தள்ளிவிட்டுக் கொலை செய்வதற்கு முன்பு, கோயல் முன்கூட்டியே தீர்மானித்த சைகையைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சௌத்ரியும், கோயலும் ஓடி செல்வது என்பது, தங்கள் குடும்பங்களுக்கு அவப்பெயரைக் கொண்டுவரும் என்று அஞ்சியதால், இருவரும் அவ்வாறு செய்வதற்கு பதிலாக அகர்வாலைக் கொல்ல முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.
"ஆரம்பத்தில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்த முயன்றனர். இது விசாரணையின் போது குற்றவாளிகளிடையே காணப்படும் ஒரு பொதுவான போக்காகும். இருப்பினும், இறுதியில் சியா, தான் அந்தச் சதியைத் தீட்டியதாகவும், அந்தத் திட்டமிடலில் சௌத்ரியும் ஈடுபட்டிருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்," என்று ஒரு காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சௌத்ரி ஆரம்பத்தில் தான் கோட்டையில் இருந்ததாகவும், ஆனால் அகர்வால் தள்ளப்பட்ட இடத்திற்குச் செல்லவில்லை என்றும், என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறியதாக அந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவர் பொய் சொல்கிறார் என்பது காவல்துறையினருக்கு தெளிவாகத் தெரிந்துள்ளது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கோயல் உட்கார்ந்து சைகை காட்ட வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து சௌத்ரி எழுந்து வந்து அகர்வாலை பள்ளத்தாக்கிற்குள் தள்ளிவிடுவார் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. "என்ன நடந்தது?, அது எப்படி? நடந்தது என்பதை அவர்கள் எங்களிடம் கூறியுள்ளனர். என்ன நடக்கப் போகிறது? என்று கேதனுக்குத் துளியும் தெரியாது. அவர் எதையும் உணர்வதற்கு முன்பே பள்ளத்தாக்கிற்குள் தள்ளப்பட்டுவிட்டார்," என்று அந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதற்கு முன்னர் இரண்டு முறை அகர்வாலை லோகட் கோட்டைக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயன்றதாகவும், ஆனால் அவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்ததாகவும் காவல்துறை முன்னதாக தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.