

மனைவியுடன் சேர்ந்து வாழ விடாமல் தடுத்ததாக கூறி, மாமியாரைக் கத்தியால் குத்திக்கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டியைச் சேர்ந்தவர் அஜ்மத் உசேன் (41). செல்போன் கடை நடத்தி வரும் இவருக்கும், தஸ்லீமா பேகம் (35) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக, தஸ்லீமா தனது குழந்தைகளுடன் அமராவதியில் உள்ள தனது தாய் ஆசியம்மாள் (48) வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். மேலும், அஜ்மத் உசேனை விவாகரத்து செய்யவும் அவர் முயற்சித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 16-ம் தேதி இரவு அஜ்மத் உசேன் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தஸ்லீமா வீட்டில் இல்லாத நிலையில், மாமியார் ஆசியம்மாள் மட்டும் இருந்துள்ளார். தனது மனைவியையும் குழந்தைகளையும் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு அஜ்மத் உசேன் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஆசியம்மாள் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அஜ்மத் உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாமியார் ஆசியம்மாளை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆசியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அஜ்மத் உசேன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
தகவலறிந்து வந்த போலீசார், ஆசியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இறுதியில், தலைமறைவாக இருந்த அஜ்மத் உசேனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில் அஜ்மத் உசேன் அளித்த வாக்குமூலத்தில் "நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழவே விரும்பினேன். ஆனால் எனது மாமியார் அதற்குத் தடையாக இருந்தார். அவர் இருக்கும் வரை எனது குடும்பம் ஒன்று சேராது என்ற ஆத்திரத்தில் இந்தக் கொலையைச் செய்தேன்," எனத் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட அஜ்மத் உசேன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.