
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் 57 வயதான பால கிருஷ்ணமூர்த்தி. இவருக்கு திருமணமாகி 50 வயதில் புஷ்பவல்லி என்ற மனைவியும் 25 வயதில் சுந்தரம் மற்றும் அஜித் குமார் என்ற மகன்களும் 20வயதில் திவ்ய பாரதி என்ற மகளும் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நிலையில் இரண்டு மகன்களும் ஐடிஐ முடித்துவிட்டு எந்த வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
திவ்ய பாரதி பக்கத்துக்கு ஊரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி கல்லூரி படித்து வந்துள்ளார், இரண்டு மகன்களும் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு பலமுறை அறிவுரை கூறியுள்ளார். இருப்பினும் அவற்றை காதில் வாங்காத இரண்டு மகன்களும் வேலைக்கு செல்லாமலே இருந்துள்ளனர். இதனால் தந்தை மகன்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன்பு அஜித் குமார் மற்றும் சுந்தரம் தங்களது தாயிடமும் பிரச்சனை செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த புஷ்பவல்லி பக்கத்துக்கு ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த தந்தைக்கும் மகன்களுக்கும் இடையே மீண்டும் வழக்கம் போல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மற்ற வாக்குவாதங்கள் போல எளிதில் முடியாமல் முற்றிய நிலையில் இரண்டு மகன்களும் தந்தையின் மீது ஆத்திரம் அடைந்துள்ளனர்.
எனவே வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை கிருஷ்ணமூர்த்தியை, அஜித் குமார் மற்றும் சுந்தரம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தி அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று காலை ரத்த வெள்ளத்தில் மிதந்த கிருஷ்ணமூர்த்தியை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு அஜித் குமார் மற்றும் சுந்தரை கைது செய்துள்ளனர். கேரளாவில் இருந்து கிருஷ்ணமூர்த்தி குடும்பத்துடன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தான் விருதுநகரில் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. மகன்களே தந்தையை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.