“கட்டைப்பையில் கொண்டுவரப்பட்ட பச்சிளம் குழந்தை” - விடுதியின் கழிவறையில் நடந்த பிரசவம்.. கர்ப்பத்தை மறைத்த காதல் ஜோடிகள்!

ஊட்டியில் தன்னுடன் கல்லூரியில் படித்த சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் இளைஞருக்கு காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்
“கட்டைப்பையில் கொண்டுவரப்பட்ட பச்சிளம் குழந்தை” - விடுதியின் கழிவறையில் நடந்த பிரசவம்.. கர்ப்பத்தை மறைத்த காதல் ஜோடிகள்!
Published on
Updated on
2 min read

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு கட்டைப் பை உடன் நேற்று மதியம் ஒரு மணிக்கு வந்த ஒரு இளைஞர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம், “சார் சாலையில் நடந்து வந்த போது குழந்தை கீழே கிடந்ததது என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தையை மருத்துவமனையில் ஒப்படைக்க எடுத்து வந்தேன்” என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் எந்த இடத்தில் குழந்தை கிடந்தது, நீ எதற்கு அங்கு போனாய் என துருவித்துருவி விசாரித்த போது இளைஞர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார்.

எனவே இளைஞர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இளைஞர் சமாளிக்கமுடியாமல் அது தன்னுடைய குழந்தை தான் என உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் இவர் ஊட்டியைச் சேர்ந்த 21 வயதான பட்டதாரி இளைஞர் என்பதும், சைதாப்பேட்டையில் தங்கி குரூப் ஒன் தேர்வுக்கு தயாராகி வருவதாக தெரிய வந்தது. ஊட்டியில் தன்னுடன் கல்லூரியில் படித்த சேலத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் இளைஞருக்கு காதல் ஏற்பட்டு இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தான் இளங்கலை முடித்த மாணவன் குரூப் 1 தேர்வு படிக்கவும் மாணவி எம்எஸ்சி படிக்கவும் சென்னைக்கு வந்துள்ளனர். அதன்படி இளைஞர் சைதாப்பேட்டையில் தங்கி குரூப் ஒன் தேர்வுக்கு படித்து வரும் நிலையில் மாணவி சென்னை பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி முதுகலை படித்து வருகிறர். சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேரும் ஒன்றாக இருந்ததன் விளைவாக மாணவி ஏழரை மாத கர்ப்பமாக இருந்துள்ளார். சென்னையில் தங்கி படித்து வந்ததால் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் இருந்துள்ளது மாணவியும் விடுமுறை திங்களில் கூட வீட்டிற்கு செல்லாமல் தான் கர்ப்பமாக இருந்ததை பெற்றோரிடம் மறைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக மாணவியின் அறையில் இருந்த தோழிகள் சொந்த ஊருக்கு சென்று இருந்த நிலையில் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டு விடுதியின் கழிவறையிலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. சக மாணவர்கள் விடுதியில் இல்லாததால் இந்த விவகாரம் விடுதியில் உள்ள யாருக்கும் தெரியவில்லை. இதையடுத்து சைதாப்பேட்டையில் உள்ள தனது காதலருக்கு மாணவி போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இளைஞர் மாணவியின் விடுதிக்கு அருகே வந்த நிலையில் இருவரும் சேர்ந்து ஒரு கட்டை பையில் குழந்தையை எடுத்துக்கொண்டு நேற்று முன்தினம்(ஆக 08) இரவு 10 மணிக்கு திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் இருவரது குடும்பத்துக்கும் அவமானம் ஏற்படும் எனவும் இன்னும் லைஃப்ல செட்டில் ஆகவில்லை என்பதால் குழந்தை கீழே கிடந்ததாக கூறி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்து விடலாம் எனவும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி வாலிபர் மட்டும் நேற்று மதியம் குழந்தையை கட்டை பையில் எடுத்துக் கொண்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்படைக்க வந்த போதுதான் திருவல்லிக்கேணி போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.இதையடுத்து மாணவியையும், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையையும் திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்துள்ளனர். மேலும் குழந்தை பிறந்த இடம் கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சென்னை பல்கலைக்கழகம் கிண்டி வளாகம் என்பதால், வாலிபரை கோட்டூர்புரம் போலீசாரிடம் திருவல்லிக்கேணி போலீசார் ஒப்படைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com