வகுப்பறையில் சிறுநீர் கழித்த 5 வயது குழந்தை.. “அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த ஆசிரியை” - கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்!

குற்றச்சாட்டுகளின்படி, அவர் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்து, ஒரு கத்தியைச் சிவந்துபோகும் அளவுக்கு சூடாக்கி
pocso case
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஒரு பிலேஸ்கூலில், ஐந்து வயது சிறுவன் தவறுதலாக வகுப்பறையிலேயே தனது பேண்டில் சிறுநீர் கழித்துவிட்டதால், அங்குள்ள ஆசிரியை ஒருவர் சூடான கத்தியால் சிறுவனின் அந்தரங்க உறுப்புகளைச் சுட்டதாக அக்குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் குடும்பத்திற்கு உதவுவதற்கு பதிலாக, பள்ளி நிர்வாகமும் முதல்வரும் அவர்களை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். செரீன் சோனி ப்ளே பள்ளியில் பயிலும், வழக்கறிஞரின் மகனான ஐந்து வயது மாணவன், ஜூலை 24 அன்று கழிவறையைப் பயன்படுத்தத் தனது வகுப்பு ஆசிரியரிடம் அனுமதி கேட்டான். இருப்பினும், ஆசிரியர் மறுத்ததால், அந்தச் சிறுவன் தன் கட்டுப்பாட்டை இழந்து, தனது கால்சட்டையிலேயே சிறுநீர் கழித்துவிட்டான்.

இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, குழந்தையை மற்றொரு அறைக்கு இழுத்துச் சென்றார். குற்றச்சாட்டுகளின்படி, அவர் கேஸ் அடுப்பைப் பற்ற வைத்து, ஒரு கத்தியைச் சிவந்துபோகும் அளவுக்கு சூடாக்கி, குழந்தையின் அந்தரங்க உறுப்புகளை சுட்டுள்ளார். மேலும், அந்த ஆசிரியை சிறுவனை உடல்ரீதியாகத் தாக்கியதுடன், இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினாலோ அல்லது இதே தவறை மீண்டும் செய்தாலோ கடுமையான விளைவுகளை சந்திக்க கூடும் என்று மிரட்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

பயந்துபோன அந்தக் குழந்தை வீட்டிற்குத் திரும்பியதும், தனக்கு நேர்ந்த கொடுமையை கண்ணீருடன் தன் பெற்றோரிடம் கூறியுள்ளது. குழந்தையின் தந்தையும் தாயும் வகுப்பு ஆசிரியரை தொடர்புகொள்ள முயன்றனர், ஆனால் அவர் அவர்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவர்கள் பள்ளி முதல்வர் ஹேமலதா சிங்கிடம் பேசியபோது, ​​அவர் எந்த ஒத்துழைப்பும் அளிக்காமல் அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. மறுநாள், சிறுவனின் தந்தை பள்ளிக்குச் சென்று இது குறித்து கேட்ட போது , ​​முதல்வரும் மேலாளரும் எந்த உதவியும் செய்யவோ அல்லது பிரச்சினையைக் கவனிக்கவோ மறுத்ததாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.

குழந்தைக்கு ஏற்பட்ட மன அதிர்ச்சி மற்றும் உடல் காயங்களைக் கருத்தில் கொண்டு, தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், காவல்துறையினரும் உடனடியாக முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தனர். இந்த விசாரணையில் மூத்த காவல்துறை அதிகாரி அதுல் சிங், "குழந்தையின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றும், காவல்துறையினர் முழுமையான விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com