கோவில்பட்டியில் காதல் விவகாரத்தில் காதலி கண் முன்னே காதலனை கத்தியால் குத்திய பெண்வீட்டார். இளைஞர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த நிலையில், காதலியின் தந்தை உள்பட 3 பேர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சஞ்சய் (18). இவருக்கும் இவரது கிராமத்தின் அருகில் இருக்கும் கெச்சிலாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் இடையே காதல் இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த காதலுக்கு பெண்ணின் வீட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் சென்னை செல்வதற்காக கோவில்பட்டி கூடுதல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சஞ்சய் காதலித்த பெண்ணின் தந்தை குமார், அவரது உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் காதலி கவிதாவை அழைத்துக் கொண்டு சென்னை செல்லும் சஞ்சையிடம் பேசலாம் என ஏமாற்றி கூடுதல் பேருந்து நிலையத்திற்கு அவரை அழைத்து வந்துள்ளனர். இவர்களை நம்பி கவிதாவும் உடன் சென்றுள்ளார். சஞ்சையை கண்ட பெண்ணின் தந்தை குமார் மற்றும் அவரது உறவினர்களும் சஞ்சய்யுடன் பேருந்து நிறுத்தத்தில் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கவிதாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்களும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்குள்ளான வாக்குவாதம் முற்றவே அவர்கள் சஞ்சையை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் கழுத்து மற்றும் சில இடங்களில் சஞ்சய்க்கு கத்திக்குத்து கடுமையாக விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சஞ்சய் ரத்த காயங்கள்ளுடன் இருந்துள்ளார். நிலைமை கைமீறிய நிலையில் அவரது நண்பர்களும் தலை தெறிக்க அங்கிருந்து ஓடியள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் விடாமல் கவிதாவின் உறவினர்களும், அவரின் தந்தையும் துரத்தி உள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கத்தி பட்டு மாரிமுத்துவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
காயம் அடைந்த சஞ்சய் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். சஞ்சய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேற்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக சஞ்சய் அதிகாலை உயிரிழந்துள்ளனர். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணின் தந்தை குமார், சங்கரநாராயணன், மாரிமுத்து ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர்.
காதல் விவகாரத்தில் காதலி கண்முன்னே காதலன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.