

நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் மேலபுதுக்குடி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவரை காணவில்லை என அவரது மனைவி நேற்று இரவு வீரவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அது தொடர்பாக வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமார் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, கடைசியாக ராம்குமாரை, கௌதம் என்ற நபர் வீட்டில் இருந்து அழைத்து சென்றதாக அவரது மனைவி தெரிவித்த நிலையில், கௌதமின் செல்போன் எண்ணை கண்டறிந்த போலீசார் அதை வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்பொழுது, அந்த செல்போன் எண்ணானது குற்றாலம் பகுதியில் இருப்பது தெரிய வரவே, குற்றாலத்திற்கு விரைந்து சென்ற வீரவநல்லூர் போலீசார் செல்போன் சிக்னல் காண்பித்த இடத்தில் உள்ள ஒரு லாட்ஜில் சோதனை செய்தனர். அங்கு லாட்ஜில் உள்ள ஒரு அறையில் ராம்குமார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு இருந்திருக்கிறார். மேலும் அருகாமையில் இருந்த மற்றொரு அறையில் மூன்று நபர்கள் போதையில் இருந்ததும் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, அந்த மூன்று பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, அதில் ஒருவர் ராம்குமாரை வீட்டில் இருந்து அழைத்து வந்த வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த கௌதம் என்பதும், அவருடன் இருந்த நபர்கள் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் முகமது ஆசிக் என்பதும் தெரியவந்தது. மூவரையும் குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்த போது, ராம்குமாரை தாங்கள் தான் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
உயிரிழந்த ராம்குமார் மாவு மில் வைத்து நடத்தி வந்த நிலையில் அந்த மில்லிற்கு எதிரில் கெளதம் டெய்லர் காய் வைத்து நடத்தி வந்துள்ளார். அப்போது மாவு மில்லில் இருந்து வரும் தூசி டெய்லர் கடையில் இருந்த துணிக மீது படர்வது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த கௌதம் அவரது நண்பர்களான மணிகண்டன் மற்றும் முகமது ஆசிக் ஆகிய இருவரின் உதவியுடன் ராம்குமாரை குற்றாலத்திற்கு சுற்றுலா செல்வோம் என அழைத்து வந்து கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.