

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விளா நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 55 வயதுடைய முருகன். இவருக்கு 50 வயதில் செல்வி என்ற மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி அவரது மாமியார் வீட்டில் வசித்து வரும் நிலையில் வேலைக்கு போகாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான முருகன் தினந்தோறும் குடித்துவிட்டு வீட்டிற்கு வராமல் மூன்று மாதமாக கிருஷ்ணாபுரம் கூட்டுச் சாலையில் உள்ள பேருந்து நிழற்கூடத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முருகனின் மகனான 34 வயதுடைய சரத்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐயப்ப மாலை அணிந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் வந்துள்ளார். மாலையை கழற்றிய உடனே சரத்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி இருக்கிறார். பின்னர் மீண்டும் மது அருந்த நினைத்த சரத்குமார் தனது தந்தையிடம் பணம் கேட்க முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி கிருஷ்ணாபுரம் கூட்டுச்சாலையில் பேருந்து நிழற்கூடத்தில் தங்கியிருந்த அவரது தந்தை முருகனிடம் சென்று குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு முருகன் “நானே யாரோ குடுக்குற காசுல குடிச்சிட்டு இருக்க நீ என் கிட்ட வந்து காசு கேக்குறியா?” என கூறி திட்டியதாக சொல்லப்படுகிறது. எனவே இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரத்குமார் பக்கத்துக் கடையில் இருந்த கட்டையை எடுத்து தந்தை என கூட பார்க்காமல் முருகனின் தலையிலும் முகத்திலும் சரமாறியாக அடித்துள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த முருகன் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.