

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழப்பழுந்தை கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விஜயா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் கௌசல்யா, சோபியா என்ற இரு மகள்கள் உள்ளனர். இரு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் தனியாக இருந்த கணவன் மனைவி இருவரும் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு செய்யாறு டவுன் பகுதியை சேர்ந்த நேரு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர்.
எனவே விநாயகம் நேரு தெருவிற்கு அருகில் உள்ள ஒரு பிரியாணி கடையில் கூலி வேலை செய்து வந்தார். ஆனால் கடந்த ஆறு மாதமாக இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. மனைவி விஜயா சித்தாளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன் விநாயகம் தினந்தோறும் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். மேலும் கடந்த ஆறு மாதமாக வேலைக்கு செல்லாததால் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தக் குடிப்பழக்கத்தால் கணவன் மனைவிக்கிடையே தினந்தோறும் வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இதேபோன்று நேற்று இரவு கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது விநாயகம் விஜியாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி விஜயா கணவன் என்றும் பாராமல் காய்கறி நறுக்க வைத்திருந்த கத்தியால் விநாயகத்தின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்த நிலையில் கணவன் இறந்ததை அறிந்த விஜயா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விஜயாவை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தன் கணவன் விநாயகம் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதோடு மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு கடுமையாக தாக்கியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் விஜயாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.