“கழுத்தை மிதித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவன்” - தலைக்கேறிய கஞ்சா போதையால் வெறிச்செயல்.. திருவொற்றியூரில் பரபரப்பு!

தானேஷ் என்ற மாணவர் கஞ்சா புகைத்துக்கொண்டு, அதன் புகையை ஜெயகணேஷின் முகத்தில் ஊதியதாக...
“கழுத்தை மிதித்து கொல்லப்பட்ட பள்ளி மாணவன்” - தலைக்கேறிய கஞ்சா போதையால் வெறிச்செயல்.. திருவொற்றியூரில் பரபரப்பு!
Published on
Updated on
2 min read

சென்னை, திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள ஜெய்கோபால் கரோடிய அரசு மேல்நிலைப் பள்ளியில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். திருவொற்றியூர் தாங்கல் வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த பெயிண்ட் நிறுவன ஊழியர் வெங்கடேசன் என்பவரது இளைய மகன் 18 வயதுடைய தனுஷ், இப்பள்ளியில் பிளஸ் 2 வரலாறு பிரிவில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் மாணவர் ஒருவர் பலத்த காயங்களுடன் சுயநினைவின்றி கிடப்பதாக சிங்காரப்பன் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுயநினைவின்றி கிடந்த தனுஷை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.

சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி ஆணையர் பால்ராஜ், ஆய்வாளர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தனுஷும் அவரது நண்பர் ஜெயகணேஷும் நேற்று முன்தினம் காலை பள்ளி அருகே சென்றபோது, பிளஸ் 1 படிக்கும் தானேஷ் என்ற மாணவர் கஞ்சா புகைத்துக்கொண்டு, அதன் புகையை ஜெயகணேஷின் முகத்தில் ஊதியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. அப்போது தனுஷ், இருவரையும் விலக்கிவிட்டு அங்கிருந்து சென்றதாக தெரிகிறது.

இதையடுத்து வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த தனுஷ், மாலை பள்ளி முடிந்ததும் பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார். அப்போது தானேஷ் தனது நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு அங்கு வந்ததாக கூறப்படுகிறது. ஜெயகணேஷ் குறித்து தனுஷிடம் அவர்கள் கேட்டுள்ளனர். ஜெயகணேஷ் பள்ளிக்கு வரவில்லை என தனுஷ் தெரிவித்த நிலையில், அவரை அழைத்துக்கொண்டு அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து தனுஷை சரமாரியாக தாக்கியதுடன், கழுத்துப் பகுதியில் காலால் மிதித்தும் கொடூரமாக தாக்கி கொலை செய்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Admin

இதில் படுகாயமடைந்த தனுஷ் சம்பவ இடத்திலேயே சுயநினைவின்றி கிடந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனிடையே, தனுஷின் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யும் வரை தனுஷின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவரது தந்தை வெங்கடேசன் தெரிவித்தார்.

இதனால் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். கஞ்சா புகைத்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறு, பள்ளி மாணவர் கொலையில் முடிந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com