திருப்பூர் மாவட்டம், பிச்சம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் குருசங்கர். இவர் திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் உள்ள மசூதிக்கு பின்புறம் ஒரு நிட்டிங் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கம்பெனி கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது, அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்தது.
பின்னர் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அழுகிய நிலையில் கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சடலம் கிடந்த தனியார் நெட்டிங் கம்பெனி குரு சங்கர் என்பவருக்கு சொந்தமானது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் குரு சங்கரின் நண்பர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பவர் அடிக்கடி அங்கு வந்து தனது நண்பருக்கு உதவியாக இருந்து வந்திருக்கிறார்.
அதுபோல கடந்த 19ம் தேதி குரு சங்கர் ஊருக்கு சென்றிருந்த நிலையில், கம்பெனிக்கு வந்த காமராஜ் வேலைகளை முடித்து விட்டு அங்கு பணிபுரிந்த வடமாநில தொழிலாளர் பப்புஸ் என்பவருடன் சேர்ந்து அன்றைய தினம் முழுவதும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது மது அருந்துவது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பப்புஸ் அருகில் இருந்த சுத்தியலை எடுத்து காமராஜின் தலையில் தாக்கியுள்ளர், இதனால் சம்பவ இடத்திலேயே காமராஜர் பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.
இதையடுத்து காமராஜ் உயிரிழந்ததை அறிந்த பப்புஸ் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அனுப்பர்பாளையம் போலீசார் தப்பி ஓடிய பப்புசை தீவிரமாக தேடி வருகின்றனர். கம்பெனியில் ஒருவர் வடமாநில தொழிலாளியால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.