

தூத்துக்குடி அருகே தெற்குசிலுக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் 26 வயதுடைய சதீஷ். இவர் தற்போது புதுக்கோட்டை பவானி நகர் பகுதியில் வீடு எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை சதிஷ் அருகில் உள்ள கடைக்கு செல்வதற்காக வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் புதுக்கோட்டை பவானி நகர் ரேஷன் கடை அருகே வந்தபோது அவரை வழிமறித்த தெற்கு சிலுக்கன் பட்டி பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குணசேகரன் என்ற குணா, 24 வயதுடைய மனோகரன் , தூத்துக்குடி திருவி.க. நகர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சுடலை, 29 வயதுடைய பரத் விக்னேஷ் மற்றும் புதுக்கோட்டை பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்த 25 வயதுடைய முத்துக்குமார் , அய்யனார் காலனி பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சுரேஷ் ஆகியோர் சதீஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனர்.
இதில் சுதாரித்துக் கொண்ட சதிஷ் அங்கிருந்து தப்பியோடி அருகில் உள்ள கடைக்குள் சென்று தஞ்சமடைந்திருக்கிறார். வெகு நேரம் தேடியும் சதிஷ் கிடைக்காததால் அந்த கும்பல் அப்பகுதியிலிருந்து சென்ற நிலையில் தப்பித்து சென்ற சதிஷ் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் “தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக” அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் ஆகியோர் மேற்கொண்ட விசாரணையில் கடன் பிரச்சனையால் இந்த கொலை முயற்சி நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சதீஷிடம் அதே பகுதியை சேர்ந்த குணா கடந்த சில வருடங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு தொகையை கடனாக பெற்றிருந்த நிலையில் நீண்ட நாட்களாகியும் கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் திருப்பி கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் சதீஷ் பலமுறை கடன் தொகையை கேட்டு குணாவை தொல்லை செய்து வந்த நிலையில் குணா தனது நண்பர்களுடன் சேர்ந்து சதீஷை தீர்த்து கட்ட முடிவு செய்து அதன்படி இன்று காலை சதீஷை தாக்க முயற்சி செய்துள்ளனர்.
ஏற்கனவே குணா மீது திருநெல்வேலி விகே புரம், திருப்பூர் பல்லடம், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.