

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கல் குவாரிகள், செங்கல் சூளைகள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். அதிலும் சிலர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே அரசர்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்குவாரியில் இரண்டு வாரங்களுக்கு முன் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்கு சேர்ந்துள்ளனர். திருநெல்வேலியில் வசித்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த 27 வயதுடைய முகமது மஹ்புல் ஹுசைன் என்பவர் கல்குவாரி உரிமையாளரிடம் கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு அவர்களை ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு சேர்த்து விட்டுள்ளார்.
அந்த தம்பதிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததாலும், சம்பளம் பத்தாது என்பதாலும் அவர்கள் வேலையில் இருந்து விலகுவதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் நேற்று இரவு கேரளா மாநிலத்திற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்து அரசர்குளத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் இருவரும் திருநெல்வேலிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை செல்போனில் தொடர்பு கொண்ட முகமது மஹ்புல் ஹுசைன் இங்கேயே வேலை செய்யுங்கள் “நீங்கள் வேலை செய்வீர்கள் என்று நான் பணம் வாங்கிவிட்டேன்” என கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறிய அவர் பைக்கில் இரண்டு இளம் சிறார்களுடன் சிவந்திபட்டி பகுதியில் ஆட்டோ வழிமறிக்க காத்திருந்திருக்கின்றனர்.
பின்னர் ஆட்டோ அங்கு சென்றதும் தம்பதி கல்குவாரியில் இருந்து பணத்தை திருடிவிட்டதாக டிரைவரிடம் கூறிய முகமது மஹ்புல் ஹுசைன் அவர்கள் இருவரையும் அங்கிருந்து காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த பெண்ணின் கணவரை தாக்கிய முகமது மஹ்புல் ஹுசைன் உட்பட மூவரும் அவரது கண் எதிரிலேயே அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். மேலும் பல மணி நேரத்திற்கு பின் இருவரையும் ரோட்டு பகுதியில் விட்டுவிட்டு மூவரும் தப்பியோடி விட்டனர்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பெண் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுதொடர்பாக ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் தப்பியோடிய முகமது மஹ்புல் ஹுசைன் மற்றும் இரண்டு இளம் சிறார்களை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. கணவர் கண் எதிரிலேயே அஸாம் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்