உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டத்தின் பலுவா கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயதுடைய அமித் குப்தா. இவர் தனது மனைவி 32 வயதுடைய ரஞ்சனா, வளர்ப்பு மகள் , 3 வயது மகன் ரேயான்ஷ் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது வீட்டிலேயே அமித் குப்தாவின் 16 வயது தம்பியும் வசித்து வந்த நிலையில், குடும்பத்தில் சொத்து மற்றும் மளிகைக் கடை தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அமித் குப்தா தனது 16 வயது தம்பியை பள்ளிக்கு அனுப்பாமல் மளிகைக்கடையில் வைத்து வேலை வாங்கி வந்ததாக சொல்லப்படுகிறது.
சிறுவனுக்கு தனக்கு தொடர்ந்து படிக்க அனுமதி மறுக்கப்பட்டதோடு, வீட்டில் போதிய கவனிப்பும் கிடைக்கவில்லை என்ற மனக்கசப்பு இருந்து வந்துள்ளது. குறிப்பாக, குடும்பத்தினர் தன்னை புறக்கணிப்பதாகவும், தனது அடிப்படை தேவைகளான உணவு மற்றும் உடைகள் கூட சரிவர வழங்கவில்லை என்றும் அவர் மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது அண்ணா மற்றும் அண்ணியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதன் படி, வீட்டில் இருந்த கோடாரியை எடுத்து கொண்டு தனது அண்ணன் அறைக்கு சென்ற அந்த சிறுவன் முதலில் தனது அண்ணன் அமித் குப்தாவை சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளார். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த மனைவி ரஞ்சனாவையும் தாக்கிய சிறுவன், அருகில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை ரேயான்ஷையும் கொடூரமாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில், மூவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அப்போது அதே அணியில் இருந்த அமித் குப்தாவின் வளர்ப்பு மகளான 9 வயது சிறுமி இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் நிலையில், அவரை மட்டும் சிறுவன் தாக்காமல் விட்டுள்ளார்.
இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திலேயே இருந்த 16 வயது சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, "எனக்கு இரண்டு நாட்களாக சாப்பாடு தரவில்லை. அதனால் கோபத்தில் இந்த செயலை செய்துவிட்டேன். சிறையில் எனக்கு சரியான நேரத்திற்கு சாப்பாடு கிடைக்குமா?" என்று சிறுவன் கதறியபடி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குடும்பத்தினரின் புறக்கணிப்பு, கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது, சொத்து தொடர்பான அச்சம் மற்றும் நீண்டகால மன உளைச்சல் ஆகியவை சிறுவனின் மனநிலையை பாதித்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவ பரிசோதனையில் சிறுவனுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுவதால், அந்த கோணத்திலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குடும்பத் தகராறு மற்றும் மன அழுத்தம் காரணமாக 16 வயது சிறுவன் தனது அண்ணன், அண்ணி மற்றும் 3 வயது மகனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.