வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பெண் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். வனிதாவின் கணவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியூரில் தங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. எனவே வனிதா தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இதனை அதே பகுதியை சேர்ந்த 28 வயதுடைய தர்ஷன் என்ற கூலி தொழிலாளி நீண்ட நாட்காளாக நோட்டமிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப் 27) குழந்தைகள் பள்ளி விடுமுறை என்பதால் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இதன் காரணமாக வனிதா மட்டும் அவரது வீட்டில் தனியாக இருந்த நிலையில், இதை கவனித்த தர்ஷன் அவரது வீட்டிற்கு சென்று அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி உள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த பெண் கத்தி ககூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அவரை தாக்கி கண்டித்ததாக சொல்லப்படுகிறது.
தொடர்ந்து இதுகுறித்து வனிதா குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தர்ஷனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த தர்ஷன் காவல் நிலையத்தின் கதவு கண்ணாடியை உடைத்ததுடன், அங்கிருந்த பெண் காவலர்களை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் குடியாத்தம் நகர போலீசார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தர்ஷனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், மது போதையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று கதவு கண்ணாடியை உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் வளத்தூர் மற்றும் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்