

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மருதுபாண்டியர் நடுத்தெருவில் வசித்து வந்தவர் 55 வயதுடைய சரவணன். இவர் ஒப்பந்த அடிப்படையில் நோட்டுப் புத்தகங்கள் பைண்டிங் செய்யும் தொழில் செய்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகன்களைப் பிரிந்து தனி வீட்டில் வாழ்ந்து வந்த சரவணனை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். தகவலறிந்த சிவகாசி வட்டார காவல் துணைக் கண்காணிப்பாளர் அனில் குமார் தலைமையிலான போலீசார்கள் சம்பவம் நடந்த வீட்டிற்கு நேரில் சென்று சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையான சரவணனின் மனைவி ஷீலா தேவி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், அவரது மூத்த மகன் அருண்குமார் தூத்துக்குடியில் ஒரு உணவு விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் சந்துரு சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். தனது கணவரை பிரிந்த ஷீலாதேவி தனது மகன்களோடு பக்கத்திலுள்ள மருதுபாண்டியர் மடத்துக் கிழக்குத் தெருவில் தனது தாயார் குருவம்மாளுடன் வசித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து படுகொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி கிழக்குக் காவல் நிலையப் போலீசார், அப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கொலையாளிகள் யார்? கொடூரமாக கொலை சம்பவம் செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தப்பி ஓடிய கொலையாளிகளை வலை வீசித் தேடி வந்த நிலையில் 25 வயதுடைய பரத், 21 வயதுடைய பாலமுருகன், 20 வயதுடைய கார்த்திகைச் செல்வன், 17 வயதுடைய கௌதம், 17 வயதுடைய அலெக்ஸ் பாண்டியன் ஆகிய ஐந்து பேரை கைது செய்திருக்கின்றனர்.
அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த சரவணன் அவரது பக்கத்துக்கு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த 40 வயதுடைய மாரீஸ்வரி என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இதனை அறிந்த மாரீஸ்வரியின் 25 வயதுடைய மகன் பரத் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரவணனை கொலை செய்திருக்கிறார். தாயுடன் தகாத உறவில் இருந்த நபரை மகன் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.