
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்துள்ள குப்பம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான பாரத். இவர் கேட்ரிங் படித்து முடித்துவிட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் பெங்களூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான நந்தினி என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது இவர்களுக்கு நான்கு மற்றும் இரண்டு வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில் பாரத் தனது குடும்பத்துடன் தாம்பரத்தில் வீடு எடுத்து தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.
வாரத்தின் இறுதி நாட்களில் விடுமுறையின் போது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அது போல சொந்த ஊருக்கு சென்று வரும் போது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நந்தினிக்கு அவரது எதிர் வீட்டில் வசிக்கும் 21 வயதான சஞ்சய் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது . இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய தகாத உறவாக மாறி, இருவரும் நெருங்கி பழகி வந்திருக்கின்றனர். இது நந்தினியின் கணவர் பாரத்திற்கு தெரிய வந்துள்ளது எனவே பாரத் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம்ஏற்பட்டு வந்துள்ளது சில தினங்களுக்கு முன்பு சஞ்சயை வைத்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி, பாரத் நந்தினியை தரக்குறைவாக பேசி திட்டியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து நந்தினி தனது காதலனான சஞ்சய் இடம் அழுதுக்கொண்டே கூறியுள்ளார். இதனை கேட்ட சஞ்சய் பாரத்தை கொலை செய்து விட்டு நாம் இருவரும் சேர்ந்து வாழலாம் என யோசனை கொடுத்துள்ளார். அதற்கு சம்மதம் சொன்ன நந்தினி தனது கணவருடன் வழக்கம் போல் கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கிழமை அவர்களதுசொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
பின்னர் எப்போதும் ஞாயிற்றுக்கிழமை இரவே சென்னைக்கு கிளம்பும் பாரத்தை நந்தினி “நாளை ஒரு நாள் இங்கு இருக்கலாம்” என வற்புறுத்தி ஊரில் தங்க வைத்து, திங்கட்கிழமை மாலை கணவனிடம் நந்தினி தன்னை கடைக்கு அழைத்து செல்ல கேட்டுள்ளார். நந்தினி மற்றும் தனது மூன்று வயது மகளை பாரத் குருவராஜபாளையம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள கடைகளுக்கு அழைத்து சென்றுள்ளார். இரவு நேரம் ஆனதால் அங்கிருந்த ஓட்டலில் உணவருந்தி விட்டு மீண்டும் வீட்டிற்கு தங்களது இருசக்கர வாகனத்தில் திரும்பினர்.
அப்போது சின்ன பள்ளிக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளிக்கு அருகே உள்ள பாலத்தில் தென்னை மட்டைகளை போட்டு வைத்து விட்டு பாரத் வருவதற்காக பதுங்கி காத்திருந்த சஞ்சய் அந்த மட்டைகளால் பாரத் வாகனம் தடுமாறி கீழே விழுந்தவுடன் பாரத்திற்கு அருகில் சென்று அவர் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக கழுத்து, கை, கால்கள் ஆகிய இடங்களில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பாரத் உயிரிழந்ததை அடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேப்பங்குப்பம் காவல் துறையினர் நந்தினியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் தனக்கு "வண்டியில் இருந்து கீழே விழுந்தது மட்டும் தான் நினைவில் இருக்கு" என கூறி முன்னுக்கு பின்னாக பதிலளித்துள்ளார். பாரத்தை கொலை செய்த சஞ்சய் தன் மீது சந்தேகம் வரக்கூடாது, என கொலை நடந்த இடத்திற்கு அருகில் இருந்த கிணற்றில் தனது ரத்த கறை படிந்த சட்டையை கழட்டி போட்டு விட்டு பின்னர், முன்பே திட்டம் தீட்டிய படி எடுத்து வந்த சட்டையை அணிந்து கொண்டு சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய போது கூட்டத்தில் ஒருவராக நின்று பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.
பிறகு பாரத்தின் மூன்று வயது பெண் குழந்தையிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குழந்தை அழுதுகொண்டே “எனக்கு தெரியும் சஞ்சய் மாமா தான் அப்பாவை இப்படி பண்ணாங்க நான் பாத்த” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே பாரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார். இதையடுத்து தலைமறைவான சஞ்சயை அவரது மொபைல் சிக்னல் வைத்து மூன்று மணி நேரத்தில் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு சஞ்சய் மற்றும் நந்தினியை கைது செய்துள்ளனர். 3 வயது மகளின் கண்முன்னே தாய் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.