கடலூர் மாவட்டம், பண்ருட்டி ராமசாமி நகரைச் சேர்ந்தவர் கதிர்வேல் மகள் கலைச்செல்வி (40). பட்டதாரி பெண்ணான இவருக்கும், வ உ சி நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் லோகநாதன் (45) என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு காதலித்து கடந்த 2016-ல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். வரதட்சணையாக 43 சவரன் தங்க நகைகள், ரூபாய் இரண்டு லட்சம் ரொக்கம், பீரோ கட்டில் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதில் வரதட்சணையாக பணம் நகை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கலைச்செல்வி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இது சம்பந்தமாக கணவன் மனைவி இருவருக்கும் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கலைச்செல்வி ஜீவனாம்சம் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த நிலையில் மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்த லோகநாதன், புதுப்பேட்டையில் வீடு எடுத்து அப்பெண்ணுடன் வாழ்ந்து வந்துள்ளார் . இது பற்றி அறிந்த மனைவி கலைச்செல்வி புதுப்பேட்டையில் கணவன் தங்கியிருந்த வீட்டிற்கு நேரில் சென்று கணவனை கையும் களவுமாக பிடித்து வீட்டிற்கு பூட்டு போட்டுள்ளார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லோகநாதனிடம் விசாரணை நடத்திய போது வீட்டிற்குள் யாரும் இல்லை என கூறியுள்ளார்.
ஆனால் கலைச்செல்வி வீட்டிற்குள் இருக்கும் பெண் வெளியில் வந்தால் தான் பூட்டை திறந்து விடுவேன் என ஆர்ப்பாட்டம் செய்த நிலையில் வீட்டிற்குள் இருந்த பெண் வெளியில் வந்து “லோகநாதனுடன் லிவிங் டூ கேதரில் இருக்கிறேன்” என கூறி கலைச்செல்வியை அவதூறாக பேசினார். இதனை அடுத்து பூட்டை திறந்து விட்ட கலைச்செல்வி போலீசார் தெரிவித்தபடி இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த காவல் நிலையத்திற்கு சென்றார். அதனை தொடர்ந்து லோகநாதனும் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வியை விவாகரத்து செய்யாமலே அவரது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வீடு எடுத்து வாழ்ந்து வந்த நிலையில், அந்த வேட்டை கலைச்செல்வி பூட்டி ஆர்ப்பாட்டம் செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.