
என்ன நடந்தது தர்மஸ்தலாவில்? முப்பது வருடங்களுக்கு பிறகு அடுத்து அடுத்து வெளிவரும் மர்மங்கள், பாலியல் வன்கொடுமை செய்து புதைத்தும், எரித்தும் அழிக்கப்பட்ட பெண்களின் உடல்கள், கருப்பு நிற உடையில் தன்னை மறைத்து கொண்டு வாக்குமூலம் அளித்த கோவில் துப்புரவு பணியாளர் சொன்னது என்ன? சாட்சியாக கொண்டு வரப்பட்ட மண்டை ஓடு யாருடையது, இப்படி தர்மஸ்தலா பற்றிய, பல கேள்விகளை ஏற்படுத்திய சம்பவத்தை பற்றி இங்கு விரிவாக காண்போம்.
துப்புரவு பணியாளரின் வாக்குமூலம்:
கர்நாடக மாநிலத்தின் தெற்கு பகுதியில் உள்ள தர்மஸ்தலா என்ற பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில் மஞ்சுநாதர் ஆலயம். இந்த கோவிலில் 1995 முதல் 2014 வரை 19 ஆண்டுகள் துப்புரவு பணியாளராக பணியாற்றியவர் பீமா. இவர் கடந்த (ஜூலை 04) தேதி தர்மஸ்தலா காவல் நிலையத்திற்கு ஒரு கடிதம் எழுதி, சில ஆதாரங்களையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பிவைத்துள்ளார். அந்த கடிதத்தில் தான் துப்புரவு பணியாளராக பணியாற்றிய போது குறிப்பிட்ட மூன்று நபர்களால் மிரட்டப்பட்டு அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் பெண்களின் உடல்களை கோவில் நிலத்தில் புதைத்தேன் என்றும், மேலும் சில உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கடிதத்தை தொடர்ந்து தனது வழக்கறிஞர்களுடன் (ஜூலை11) பெல்தங்கடி வட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் ஆன பீமா பல திடுக்கிடும் சம்பவங்களை வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் நேத்ராவதி நதி கரைக்கு அருகில் SUV காரில் பெண்களின் உடல்களை கொண்டு வரும் மர்ம நபர்கள் அந்த உடல்களை தன்னிடம் கொடுத்து புதைக்க சொன்னதாகவும், மறுத்தால் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்கள் என்றும், அதற்கு பயந்து 100 உடல்களை கோவில் நிலத்தில் புதைத்து மேலும் பல உடல்களை எரித்தும் தான் அழித்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தான் செய்து வருவது மிகவும் கொடூரமான செயல் என்பதை உணர்ந்து, தன்னையும் தனது குடும்பத்தையும் காப்பாற்றி கொள்ள பீமா இரவோடு இரவாக கர்நாடகாவை விட்டு தப்பித்து சென்று வெளியூர்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார். இவர் அளித்த வாக்குமூலம் கர்நாடக மக்களை மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி உள்ளது.
அனன்யா:
பீமா கொடுத்த வாக்குமூலம் வெளிவந்து மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கர்நாடகாவை சேர்ந்த 63 வயதான சுஜாதா என்பவர் தனது மகளும் அந்த கோவிலில் புதைக்கப்பட்டுள்ளதாகவும், உடலை மீட்டு தருமாறு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த 2003 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த தனது மகளான அனன்யா அவர்களது நண்பர்களுடன் தர்மஸ்தலா கோவிலுக்கு சென்ற போது காணாமல் போனதாகவும், இதனை அறிந்து கோவிலுக்கு சென்று தான் கேட்டபோது அங்கிருந்த ஒருவர் “உங்கள் மகளை கோவில் நிர்வாகிகள் சிலர் கடத்தி சென்றதாகவும்” கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசில் புகார் அளிக்க சென்ற போது புகாரை ஏற்க மறுத்து தன்னை அவதூறாக பேசி அனுப்பியதாகவும். மேலும் மீண்டும் கோவிலுக்கு சென்ற தன்னை சிலர், மகளை பற்றி தகவல் தெரியும் என கூறி அழைத்து சென்று தாக்கியதில் தான் கோமாவில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் கோமாவில் இருந்து மீண்டு மகளை பற்றி கவலையில் இருந்த போதுதான் இந்த வழக்கு தனக்கு தெரியவந்ததாகவும் எனவே எனது மகளின் உடலை மீட்டு கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
சௌஜன்யா:
கர்நாடகாவின் பெல்தங்கடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி சௌஜன்யா. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு (அக் 09) தேதி கல்லூரிக்கு சென்று வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் சௌஜன்யாவை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். மறுநாள் தர்மஸ்தலா கோவிலுக்கு அருகில் அரை நிர்வாணமாக சௌஜன்யாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு மக்களால் கவனிக்கப்பட்டு போராட்டங்கள் வெடித்த நிலையில், போலீசால் தர்மஸ்தலாவில் யாசகம் கேட்டு சுற்றி திரியும் சந்தோஷ் என்பவர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால் இந்த கொலையை சந்தோஷ் தான் செய்தார், என்பதற்கு போலீசால் போதிய ஆதாரங்கள் கொடுக்கப்படாத நிலையில் அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது.
அன்றிலிருந்து இன்றுவரை சௌஜன்யா வழக்கில் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் தான் பீமா அளித்த வாக்குமூலத்தில் தான் 2012 ஆம் ஆண்டு விடுப்பு எடுத்து சொந்த ஊருக்கு சென்ற போது (அக் 09) தேதி தனக்கு போன் செய்த மர்ம நபர்கள் உடலை புதைக்க வேண்டும் என்று கூறியதாகவும், தான் வீட்டில் இருக்கிறேன் என கூறியவுடன் போனை வைத்தனர் என்றும், பிறகு விடுமுறை முடிந்து தர்மஸ்தலாவிற்கு வந்த போது சௌஜன்யா வழக்கு குறித்து தான் தெறித்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே இவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்களில் ஒருவராக சௌஜன்யா இருக்கக்கூடும் என்ற கேள்வி தற்போது மக்களிடையே எழுந்துள்ளது.
பீமாவின் உறவுக்கார சிறுமி:
பீமாவிற்கு சௌஜன்யா வழக்கின் போதே தனது மனசாட்சி உறுத்திய நிலையில் 2014 ஆம் ஆண்டு கோவிலுக்கு குடும்பத்துடன் வந்த அவரது உறவுக்கார சிறுமி ஒருவர் தொலைந்து போனதை அடுத்து, அந்த மர்ம நபர்களால் அந்த சிறுமியின் உடல் பீமாவிடம் புதைக்க கொடுப்பட்டுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பீமா அந்த உடலை புதைக்கும் போது ஆதாரங்களாக புகைப்படத்தையும் வீடியோக்களையும் எடுத்து கொண்டு இரவோடு இரவாக உறவை விட்டு தப்பித்து சென்றுள்ளார். பணியை விட்டு பீமா சென்ற நிலையில் அந்த மர்ம நபர்கள் பலமுறை பீமாவிற்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வழக்கறிஞர் வாலின்:
இது குறித்து தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அரசு வழக்கறிஞர் வாலின், பீமா கொடுத்த வாக்குமூலத்தில் சில குறிப்பிட பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தும், நடந்த சம்பவத்திற்கான போதிய ஆதாரங்கள் வழங்கப்பட்டு இருந்தும் 15 நாட்களுக்கு மேலாக போலீஸ் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த வழக்கின் உண்மைத்தன்மையை அறிந்து வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்குமாறு அரசாங்கத்திடம் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் சௌஜன்யா, அனன்யா, வேதவள்ளி போன்ற பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாக்குமூலம் அளித்த பீமா தலைமறைவான நிலையில் இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்ட பிறகே உண்மையான குற்றவாளிகள் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.