

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே பழைய பெருங்களத்தூரில், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட திருமணமான பெண்ணுடனான தொடர்பால் மனஉளைச்சலுக்கு ஆளான காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பழைய பெருங்களத்தூர் எத்திராஜ் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் கார்த்திக்ராஜா (30) பி.காம் பட்டதாரியான இவர், பெருங்களத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 26 வயதான பெண் பட்டதாரி ஆவார். இருவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா மற்றும் செல்வி, 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். செல்வி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, குடும்ப எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு தனியாக வீடு எடுத்து வசித்து வந்த இத்தம்பதியரின் குடும்ப வாழ்க்கை ஆரம்பத்தில் சுமூகமாக சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், கார்த்திக்ராஜா கஞ்சா பழக்கத்திலும், இன்ஸ்டாகிராம் பயன்பாட்டிலும் அதிகமாக ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக சமூக வலைதளங்களில் பெண்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். அவரது செல்போனை குழந்தைக்கு விளையாட கொடுத்தபோது, அதை பார்த்த செல்விக்கு பல பெண்களுடன் வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் உரையாடி வந்தது தெரியவந்துள்ளது. அதில் திருமணமான பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து செல்வி, தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், “ஆம்பளனா அப்படி தான் இருப்பாங்க கண்டுகொள்ளாமல் போ, இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என அவர்கள் அலட்சியமாக பேசி தவிர்த்துள்ளனர். மேலும், இதைக் குறித்து மகன் கார்த்திக்கிடம் “ ஏண்டா நீ செல்போனை லாக் போட்டு வைக்க மாட்டியா” என செல்வி காது பட பேசியதையும் கேட்டு மனமுடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பெரிதும் மனம் உடைந்த செல்வி கணவனிடம் உரிமையுடன் “நான் காதலித்து தானே கல்யாணம் செய்தேன்” என மனம் உருகி நியாயம் கேட்டுள்ளார். அதற்கு “நீ வேண்டாம் அவள் தான் வேணும்” என்று கண்ட பெண்ணுக்காக கட்டிய மனைவி கண்ணத்தில் அடித்துள்ளார். இதனால் மன உளைச்சளுக்கு ஆளான செல்வி குழந்தையை ஹாலில் விட்டு கோபமாக அறைக்கு சென்றுள்ளார். பின்னர் வெகு நேரம் ஆகியும் வெளியே வராததால் குடும்பத்தினர் பதறி போய் உள்ளனர். பின்னர் கார்த்திக் ராஜா செல்வியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். செல்வியின் அம்மா மற்றும் உறவினர்கள் அங்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது புடவையால் செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வியின் தாய் தேவி, பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் செல்வியின் உடலை கைப்பற்றி, தற்கொலை குறித்த கடிதங்களையும் மீட்டுள்ளனர். உடல் உடற்கூறு ஆய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கார்த்திக்ராஜாவை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் பெண் உயிரிழந்துள்ளதால், தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற உள்ளது.
இன்ஸ்டாகிராம் தொடர்பால் காதல் மனைவி தற்கொலைக்கு தள்ளப்பட்டதும், 2 வயது குழந்தை தாய், தந்தை அரவணைப்பு இன்றி தவிக்கும் நிலையும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.