
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்தவர் மான்சிங். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், ஒன்பது வயதில் ஒரு மகனும் உள்ளனர். மான்சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அனிதா வீட்டிற்கு அருகிலேயே ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார்.
அனிதாவிற்கும் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வந்த காசிராம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. கடந்த நான்கு வருடங்களாக இவர்களுக்கு தகாத உறவு இருந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன்பு இதை பற்றி மான்சிங் அறிந்துள்ளார். இது குறித்து அனிதாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.
இருப்பினும் அனிதா தனது உறவை கைவிடாமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மான்சிங் அனிதாவை “இனிமேல் கடைக்கு செல்ல வேண்டாம் கடையை வாடகைக்கு விடுவோம்” என கூறி அனிதாவிடம் இருந்த போனையும் பறித்து வைத்துள்ளார். எனவே அனிதாவும் அவரது காதலனும் சேர்ந்து மான்சிங்கை கொல்ல திட்ட மிட்டுள்ளனர்.
கொலை செய்ய கூலிப்படைக்கு 2 லட்சம் கொடுத்த காசிராம் (ஜூன் 7) ஆம் தேதி இரவு கூலிப்படையினருடன் அனிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஏற்கனவே காசிராம் வருவதை அறிந்து காத்திருந்த அனிதா, கதவை லேசாக தட்டியதும் விரைந்து வந்து திறந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற காசிராம் உறங்கி கொண்டிருந்த மான்சிங்கை சரமாரியாக தாக்கியுள்ளார். மான்சிங் முகத்தில் தலையணை வைத்து கொன்றுள்ளார்.
காலை விடிந்ததும் மான்சிங்கின் உறவினர்களுக்கு போன் செய்த அனிதா, தனது கணவர் தூக்கத்திலேயே இறந்து விட்டதாக கூறி நாடகமாடியுள்ளார். அண்ணனை பார்க்க வந்த மான்சிங்கின் தம்பி கபீர் அவரது உடலில் காயங்கள் இருப்பதை கவனித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து மான்சிங்கின் மனைவி அனிதாவிடம் போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்து அழுது கொண்டே மான்சிங்கின் மகன் வெளியில் வந்துள்ளார். பின்னர் போலீசிடம் சென்று “நான் ஒன்னு சொல்லணும் அப்பாவை நைட் யாரோ வந்து அடிச்சாங்க அம்மா தான் கதவு திறந்து விட்டாங்க. அவங்க கூட காசி ராம் அங்கிள் இருந்தாரு” என கூறியுள்ளார். இதனால் அனிதாவிடம் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு அனிதா தனது காதலனுடன் சேர்ந்து மான்சிங்கை கொன்றது தெரியவந்துள்ளது.
இரவு கதவு தட்டிய சத்தம் கேட்டு முழித்த மான்சிங்கின் மகன் தூங்குவது போல நடித்து நடந்ததை எல்லாம் கவனித்துள்ளார். எங்கு தான் உறங்காமல் இருப்பது அந்த கும்பலுக்கு தெரிந்தால் தன்னையும் கொன்று விடுவார்களோ என்ற அச்சத்தில் விடியும் வரை தூங்குவது போல நடித்துள்ளார். அனிதா, காசிராம் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ள போலீசார் கொலையில் சம்பந்தப்பட்ட மற்றவர்களை தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.