

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்தவர் அம்ப்ரோஸ் இவரது மகள் 27 வயதுடைய பிரியங்கா. எம்பிஏ பட்டதாரியான இவருக்கும் பாளையங்கோட்டை சாந்தி நகர் பகுதியை சேர்ந்த ஜெப்ரின் டேவிட்சன் என்பவருக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக மனைவியை ஜெப்ரி டேவிட்சன் சந்தேகப்பட்டு அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 25 ஆம் தேதி குடும்பத்தினரிடம் பிரியங்கா போனில் பேசும்போது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வில்லை எனக்கும் எனது கணவருக்கும் சண்டை என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வருடம் பிறந்து சில நிமிடங்களில் பிரியங்கா தனது கணவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும், அவரை காப்பாற்ற முயன்று திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளதாகவும் கணவர் ஜெப்ரி தரப்பிலிருந்து பெண் வீட்டிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரியங்கா சிகிச்சை பலனின்றி கடந்த (ஜன 3) ஆம் தேதி அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியங்கா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனிடையே பிரியங்கா தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை அல்ல என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
மேலும் “வருடம் பிறந்து சில நொடிகளில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியீட்டு மகிழ்ச்சியாக வருடத்தை தொடங்கி பிரியங்கா அடுத்த சில நிமிடங்களில் எவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முடியும்? கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்துவிட்டு நாடகம் ஆடுகின்றனர்” என பிரியங்காவின் சகோதரி மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதோடு உடனடியாக கணவர் ஜெப்ரி டேவிட்சனை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் தற்போது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். திருமணம் ஆகி 7 ஆண்டுகளுக்குள் பெண் சந்தேகமான முறையில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.