"Selfie வீடியோவால் வெளிவந்த கொலை!" நண்பன் காதலனாக மாறியதால் கணவனை பிரிய நினைத்த மனைவி - உயிரிழந்த பெண் கொடுத்த 'அந்த ஒரு Hint..'

2026 ஜூன் 5-க்குள் நான் ஹைதராபாத் திரும்பவில்லை என்றால், உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும்"
Harini murder case
Harini murder caseHarini murder case
Published on
Updated on
2 min read

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் இருந்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் 10 நாட்கள் கழித்து வெளிவந்துள்ளது. டெக்கலி மண்டலம், சோர்லிகம் கிராமத்தில் தும்பாலா ஹரிணி (24) கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஹரிணியின் தலையில் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்து, மாரடைப்பால் ஏற்பட்ட இயற்கையான மரணம் என்று கூறி 10 நாட்களாக இந்தச் சம்பவத்தை மறைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த ஆதாரத்தையும் அழிப்பதற்காக உடல் உடனடியாக தகனம் செய்யப்பட்டது. இருப்பினும், பாதிக்கப்பட்டவரின் கடைசி செல்ஃபி வீடியோ இந்த முழு சதியையும் அம்பலப்படுத்தியுள்ளது.

பைல விஜய குமாரி (45), டம்பால பாலுசாகு (72) மற்றும் டம்பால தந்தேஸ்வர ராவ் (36) என மூன்று குற்றவாளிகளையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பி மற்றும் நான்கு கைபேசிகள் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. இக்கொலை முன்பே நன்கு திட்டமிடப்பட்ட சதியின் விளைவாக நடந்ததாகவும், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதாகவும் ஸ்ரீகாக்குளம் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

தும்பாலா ஹரிணி, 2020 அக்டோபரில் தந்தேஸ்வர ராவைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அவர் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டு படித்துவந்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். பட்டப்படிப்பை முடித்த பிறகு, ஹரிணி ஒரு அரசு வேலைக்குத் தயாராகத் தொடங்கினார். அவர் தனது 4 வயது மகனுடன் ஹைதராபாதுக்குக் குடிபெயர்ந்து, APPSC குரூப் A தேர்வுகளுக்குத் தயாராகத் தொடங்கினார். படிப்பையும் குழந்தைப் பராமரிப்பையும் ஒருங்கே கையாள்வது கடினமாக இருந்ததால், ஹரிணி தனது மகனை ஹைதராபாத்தில் உள்ள ஆதர்ஷ் நகரில் வசிக்கும் தனது தாயார் பைலா விஜயகுமாரியுடன் தங்க வைத்தார். பின்னர் அவர் ஹைதராபாத்தில் உள்ள எஸ்.ஆர். நகரில் ஒரு புகழ்பெற்ற தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து, விடுதியில் தங்கியிருந்தபடியே அரசு தேர்வுக்குத் தீவிரமாகத் தயாராகத் தொடங்கினார்.

அந்த பயிற்சி மையத்தில், ஹரிணி ஹைதராபாத்தைச் சேர்ந்த சுதா நாகேந்திராவுடன் நட்பு கொண்டுள்ளார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நட்பைப் பற்றி ஹரிணியின் தாய் விஜயகுமாரி அறிந்ததும், அவர் ஹரிணியுடன் தொடர்ந்து வாக்குவாதம் செய்யத் தொடங்கியுள்ளார். நிலைமை மோசமடைந்ததால், இந்த ஆண்டு பிப்ரவரியில், ஹரிணி பாலநகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவர் தந்தேஸ்வர ராவிலிருந்து பிரிந்து சுதா நாகேந்திராவைத் திருமணம் செய்ய விரும்புவதாக அவர் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

காவல்துறையின் விசாரணையின்படி, இந்த உறவில் மனமுடைந்த விஜயகுமாரி மற்றும் தந்தேஸ்வர ராவ், ஹரிணியைக் கொல்லத் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் விவாகரத்து நடைமுறைகளை முடிக்கும் சாக்கில் ஹரிணி கிராமத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஹரிணிக்குத் தன் தாய் மீது சந்தேகம் இருந்ததால், 2026 மே 31 அன்று சோர்லிகம் புறப்படுவதற்கு முன்பு, அவர் சுதா நாகேந்திராவுக்கு ஒரு செல்ஃபி வீடியோவை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில், "நான் என் சொந்த ஊருக்குச் செல்கிறேன். 2026 ஜூன் 5-க்குள் நான் ஹைதராபாத் திரும்பவில்லை என்றால், உடனடியாக காவல்துறையைத் தொடர்பு கொள்ளவும்" என்று ஹரினி தெளிவாகக் கூறியிருந்தார். பின்னர் ஜூன் 1 ஆம் தேதி இரவு, ஹரிணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது, விஜயகுமாரியும் அவரது மாமனாரான டம்பாலா பாலுசாகுவும், ஹரிணியின் தலையில் இரும்புக் கம்பியால் பலமுறை தாக்கியுள்ளனர். அந்த அடிகள் மிகவும் கடுமையாக இருந்ததால், ஹரிணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அவர்கள் தந்தேஸ்வர ராவை அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த நேரத்தில், தந்தேஸ்வர ராவ் சந்தேகம் வராமல் இருப்பதற்காக, திரைப்படம் பார்க்க வேண்டுமென்றே கிராமத்தை விட்டு வெளியே சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இரவில் வீடு திரும்பியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் சேர்ந்து, ஈரத்துணிகளால் வீட்டிலும் உடலிலும் இருந்த இரத்தக் கறைகள் அனைத்தையும் துடைத்தனர். அருகிலுள்ள கிராம மக்கள் ஹரிணிக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நினைக்கும் வகையில் அவர்கள் உடலை வைத்தனர். கிராம மக்களும் அவ்வாறே நம்ப வைக்கப்பட்டனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, ஜூன் 2 ஆம் தேதி காலையில் ஹரிணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இரத்தக்கறை படிந்த ஆடைகள் மற்றும் பிற ஆதாரங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. இதன் மூலம், இந்தக் கொலை 10 நாட்களுக்கு மறைக்கப்பட்டிருந்தது. ஜூன் 5 ஆம் தேதி ஹரிணி ஹைதராபாத் திரும்பாததால், சுதா நாகேந்திரா பாலநகர் காவல் நிலையத்தில் காணாமல் போனவர் மற்றும் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து புகார் அளித்துள்ளார். இரு மாவட்ட காவல்துறையினரும் ஒருங்கிணைந்த விசாரணையைத் தொடங்கினர். விசாரணைக் குழு சோர்லிகம் வந்தபோது, ​​ஆதாரங்கள் இல்லாததால் ஆரம்பத்தில் விசாரணை கடினமாக இருந்தது, ஆனால் ஹரிணியின் கடைசி வீடியோ மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்கள் இந்த வழக்கை வெளிக்கொணர்ந்தன. காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட மூவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையின் போது, ​​மூவரும் கொலைத் திட்டம் மற்றும் அதற்கான நோக்கத்தை ஒப்புக்கொண்டனர். இந்த சதியில் வேறு யாரேனும் ஈடுபட்டிருந்தார்களா? என்பதைக் கண்டறிய காவல்துறை தற்போது மேலும் விசாரித்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com