மர்ம கும்பலால் இளைஞர் வெட்டிக்கொலை​! திருமயம் அருகே கொடூர சம்பவம்

திருமயம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர்
thirumayam murder case
Published on
Updated on
1 min read

​புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ரவுடி கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் ஆத்தங்குடி அருகே உள்ள ஆரோக்கிய புரத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் லோகநாதன்(23). இவர், நேற்று மாலை தனது நண்பர்கள் ஆறு பேருடன் திருமயம் அருகே உள்ள மலைக்குடிபட்டி டாஸ்மாக் கடைக்குச் சென்றுள்ளார். மதுவை வாங்கி கொண்டு அருகில் உள்ள கண்மாய் பகுதிக்கு மதுஅருந்த சென்றுள்ளார். தஞ்சாவூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோனப்பட்டு விளக்கு ரோடு அருகே அவர்கள் சென்றபோது, திருமயம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் மது போதையில் லோகநாதன் மற்றும் அவருடன் இருந்த 6 பேரை வழிமறித்து உள்ளனர். திருமயம் அருகிலுள்ள துளையானூர் பாப்பாத்தி ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(30).

​பின்னர் மது போதையில் இருந்த சதீஷ்குமார் மற்றும் அவருடன் இருந்த கும்பல், லோகநாதன் மற்றும் அவரது நண்பர்களிடம் வீண் வம்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களை வலுக்கட்டாயமாகத் தோப்புக்கரணம் போடச் சொல்லி வற்புறுத்தியதுடன், லோகநாதன் செல்போனையும் பறித்துக் கொண்டு அராஜகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் லோகநாதனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் தலை மற்றும் இரண்டு கால்களிலும் பலத்த வெட்டு காயமடைந்த லோகநாதன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரை அருகில் இருந்த கண்மாயில் வீசி சென்றுள்ளனர். பின்னர் தாக்குதல் நடத்திய கும்பல் உடனடியாக அங்கிருந்து காரில் தப்பி ஓடிவிட்டது. இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமயம் போலீசார், உயிரிழந்த லோகநாதனின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும்  தப்பியோடிய சரித்திர பதிவேடு குற்றவாளி சதீஷ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளியான சதீஷ்குமார் கடந்தாண்டு தனக்கு எதிராக புகார் கொடுத்த  வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த ஜகபர்அலி என்பவரை லாரியேற்றி படுகொலை செய்த குவாரி உரிமையாளர்களில் ஒருவரான ராசு என்ற குற்றவாளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது‌.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com