
சென்னை அண்ணா நகர் அருகே உள்ள ஆர்.வி. நகர் பகுதியில் வசித்து வருபவர் ஷாயிதா பேகம். இவருக்கும் சென்னை சோலைமான் நகர் பகுதியில் வசித்து வந்த அபூபக்கர் சித்திக் என்பவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு, செப்.19 தேதி வரதட்சணையின்றி, இருவீட்டாரும் திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த சூழலில், திருமணத்திற்கு பிறகு ஷாயிதாவுடன் வாழ மறுத்து அவரது கணவர் அபூபக்கர் ஷாயிதாவை தனிமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த ஷாயிதா இது குறித்து தனது மாமனார் மற்றும் மாமியாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், மாமியார் நிஷா மற்றும் மாமனார் பாஷா, ஷாயிதாவை காரணமே இல்லாமல் திட்டி அவரையும் அவர் குடும்பத்தாரையும் பற்றி அவதூறாக பேசி திருமணமான 37 நாட்களில் ஷாயிதாவை வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. பிறகு அண்ணா நகரில் உள்ள தனது தாய் வீட்டில் வாழ்ந்து வந்த ஷாயிதா, மீண்டும் (10.02.2025) அன்று தனது கணவர் வீட்டிற்கு சென்று தன்னுடன் சேர்ந்து வாழுமாறு கேட்டுள்ளார். ஆனால் அபூபக்கர் குடும்பத்தினர் ஷாயிதாவை தங்கள் வீட்டிற்குள் சேர்த்துக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
இதனால் மனமுடைந்த ஷாயிதா, காவல் எண் 100 -க்கு போன் செய்து இதைப் பற்றி புகாரளித்துள்ளார். தகவல் அறிந்து வந்த E5 சோழவரம் காவல்துறையினர், அபூபக்கர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அறிவுரை சொல்லி ஷாயிதாவை வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளனர். காவலர்கள் கூறியதால் ஷாயிதாவை ஏற்றுக்கொண்ட குடும்பத்தினர், அவரை மூன்று நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி வரதட்சணையாக நகைகள், சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூபாய் ஐந்து லட்சம் ரொக்க பணம் கேட்டு தொல்லை செய்ததாகவும், மேலும் ஷாயிதாவின் போனை பறித்து வைத்துக் கொண்டு வெளியுலக தொடர்பை துண்டித்து தங்கள் வழக்கப்படி விவாகரத்து பத்திரத்தில் ஷாயிதாவின் விருப்பமின்றி கையெழுத்து பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அபூபக்கர் குடும்பத்தினர் கொடுமை செய்ததால் அவர்களது தாய் வீட்டிற்கு சென்ற ஷாயிதா (07.07.2025) அன்று W7 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் “கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாகவும் காரணமில்லாமல் தன்னுடன் கணவர் வாழ மறுத்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும்” புகாரளித்துள்ளார். புகாரை பெற்ற உதவி ஆய்வாளர் விமலா, அபூபக்கர் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளார். ஆனால் காவல் நிலையத்திற்கு செல்லாமல் அபூபக்கர் ஷாயிதாவை தனிமையில் சந்தித்து “நான் உன்னுடன் வாழ விரும்புகிறேன், உன்னை நன்றாக பார்த்துக் கொள்வேன், என் மீதும் என் குடும்பத்தார் மீதும் கொடுத்தது பொய்யான புகார் என கூறி புகாரை வாபஸ் வாங்கிவிடு” என கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பி புகாரை வாபஸ் வாங்க (10.07.2025) அன்று ஷாயிதா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஷாயிதாவுக்கு முன்பே காவல் நிலையத்திற்கு சென்ற அபூபக்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் காவலர்கள் முன்பு ஷாயிதா பற்றிய பல பொய் குற்றங்களை முன்வைத்துள்ளனர். அதில் “ஷாயிதாவிற்கு 300 பேருடன் தொடர்பு இருப்பதாகவும், திருமணத்திற்கு பிறகும் வேறு சில ஆண்களுடன் ஊர் சுற்றுவதாகவும்” கூறியுள்ளனர். மேலும் அபூபக்கர் “நீயாவது உன் வாழ்க்கையாவது.. போய் செத்து தொலை, இனி நான் உன் கூட வாழ மாட்டேன்” என கூறியதாக தெரிகிறது. இந்நிலையில் ஷாயிதாவின் புகாரை பெற்ற உதவி ஆய்வாளர் விமலா அங்கு இல்லாத நிலையில், அன்று காவல் நிலையத்தில் இருந்த ஆய்வாளர் அபூபக்கர் தரப்பிற்கு சாதகமாக நடந்து கொண்டு ஷாயிதாவிற்கு அறிவுரை கூறியதாக தெரியவருகிறது.
இதனால் மனமுடைந்த ஷாயிதா (ஜூலை 10) தேதி இரவு அவரது வீட்டில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் ஷாயிதாவை மீட்டு KMC மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க, நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று நேற்று (ஜுலை.15) தனது வீட்டிற்கு ஷாயிதா திரும்பியுள்ளார். இதற்கிடையே ஷாயிதாவின் தம்பி, KMC மருத்துவமனை K6 காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வருவதால் இது குறித்து K6 காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட K6 காவல் நிலைய அதிகாரிகள், 'இது குடும்ப வன்முறை எங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது, எனவே சோலைமான் நகர் காவல் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அலட்சியமாக பதிலளித்ததாக ஷாயிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையின் கீழ், பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்கும் சட்டம் 27-ன் கீழ் பாதிக்கப்பட்ட பெண் தான் வசிக்கும் இடத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என சட்டம் இருந்தும், இன்று வரை K6 காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஷாயிதாவின் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருவதாகவும், எனவே உரிய நடவடிக்கை எடுத்து தன்னையும் தனது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமை செய்த அபூபக்கர் மற்றும் அவரது குடும்பத்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஷாயிதா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்