
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் PPGD.சங்கர். இவர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவின் மாநில பட்டியலின பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு பூந்தமல்லி அருகே காரில் சென்று கொண்டிருந்த போது வெடிகுண்டு வீசியும், துரத்தி துரத்தி வெட்டப்பட்டும் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஒரகடம் அருகே வாரணவாசி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த PPGD சங்கரை கொலை செய்த ஏ1 குற்றவாளியான சாந்தகுமாரின் உறவினர் அகிலன் என்பவர் நேற்று இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்பொழுது சாப்பிட சிக்கன் ரைஸ் ஆர்டர் செய்துள்ளார்.
கடையில் இருந்த மாஸ்டர் சிக்கன் ரைஸ் தீர்ந்து விட்டது என்று கூற ஏற்கனவே கடைக்கு வந்தவருக்கு முன்னரே போடப்பட்ட சிக்கன் ரைஸை சப்ளையர் அந்த குறிப்பிட்ட நபருக்கு கொடுத்துள்ளார். இதைப் பார்த்த ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த அகிலன் மிகவும் கோபமடைந்து அந்த சிக்கன் ரைஸை சாப்பிட்டு வந்த தனியார் தொழிற்சாலை ஊழியரிடம் சென்று, “நான் யார் தெரியுமா? பி பி ஜி டி சங்கரை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தவனே நான்தான்”. என கூறி அந்த நபரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிக்கன் ரைஸ் சாப்பிட வந்தவரை தாக்கிய ரவுடி அகிலன் மீது ஒரகடம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சங்கரை கொலை செய்தவன் நான் தான் என அவர் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்