கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் கடம்பன்குறிச்சி கிராமம் துவார பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு எட்டாம் வகுப்பு பயிலும் பிருந்தா என்ற மகளும் பத்தாம் வகுப்பு படித்து வரும் சக்தி என்ற மகனும் உள்ளனர். சக்தி அவரது பாட்டி வீட்டில் தங்கி படித்து வரும் நிலையில் பிருந்தா அவரது பெற்றோர் வீட்டில் இருந்து அருகில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி கணேசன் வழக்கம் போல காலையில் தேங்காய் உரிக்கும் வேலைக்கு சென்றிருக்கிறார்.
மேலும் லட்சுமியும் 100 நாள் வேலைக்கு செல்ல தயாரான நிலையில், பிருந்தா தனது தாயிடம் “நான் இன்று பள்ளிக்கு செல்லவில்லை கை கால் உடம்பெல்லாம் வலிக்குது, வீட்டிலேயே இருக்கிறேன்” என சொல்லியுள்ளார். எனவே லட்சுமி பிருந்தாவிற்கு தேவையானதை செய்து கொடுத்துவிட்டு வேலைக்கு சென்றிருக்கிறார். பின்னர் வேலை முடிந்து லட்சுமி மதியம் ரெண்டு மணி அளவில் வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது பிருந்தாவை வீட்டில் காணவில்லை என சொல்லப்படுகிறது. எனவே லட்சுமி தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்.
பல இடங்களில் தேடியும் பிருந்தா கிடைக்காததால் இரவு 9 மணிக்கு அருகில் உள்ள வாங்கல் காவல் நிலையத்திற்கு தங்களது மகளை காணவில்லை என புகார் மனு கொடுக்க சென்றிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த காவலர் நீங்க போயிட்டு நாளைக்கு காலையில் வாங்க என அலட்சியமாக அவர்களை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. எனவே மீண்டும் பிருந்தாவின் பெற்றோர் அடுத்த நாள் காலை 10 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்றனர். இருப்பினும் மதியம் 2 மணி அளவில் அவர்களின் புகாரை பெற்ற காவல்துறையினர் விசாரிப்பதாக சொல்லி அனுப்பி வைத்திருக்கின்றனர்.
மீண்டும் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்று பெற்றோர் மாலை 5 மணி வரை காத்திருந்தனர் அதற்கு மேல் தான் வாங்கல் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. எனவே பிருந்தாவின் பெற்றோர் நேற்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தங்களது மகளை தனிப்படை அமைத்து விரைந்து கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் “எங்களது மகள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என எங்களுக்கு பயமாக இருக்கிறது. எங்கள் மகள் இல்லாமல் எங்கள் குடும்பமே கவலையில் இருக்கிறோம் எனவே விரைவில் கண்டுபிடித்து தர வேண்டும்” என கூறி பெற்றோர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.