தண்ணீரையும் காற்றையும் பார்த்து பயந்த இளைஞர்!.. தூக்கிட்டு தற்கொலை.. மகனை பார்த்து கதறும் பெற்றோர்கள்!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர்
bala murugan
bala murugan
Published on
Updated on
2 min read

மதுரை மாநகர், அவனியாபுரம் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்   ஆனந்தன்,விஜயலட்சுமி தம்பதியினர், இவர்கள் இரு மகன்கள் ஒரு மகளுடன் வசித்துவந்துள்ளனர். இவர்களின்  மூத்த மகனான பாலமுருகன் வயது 25, இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு குடும்பத்தின் பொருளாதார தேவைக்காக, பல்வேறு வேலைக்கு சென்று சம்பாதித்து குடும்பத்திற்கு உதவி வந்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென 2 பூனைகள் சண்டை போட்டபடி வந்து பாலமுருகன் மீது விழுந்துள்ளது. 

இதனால் பாலமுருகன் பதற்றத்தில் உறக்கத்திலிருந்து எழுந்த போது ஒரு  பூனை எதிர்பாராதவிதமாக பாலமுருகனின் தொடையில் கடித்துள்ளது. இதில் சிறிய காயம் ஏற்பட்டதால், காயங்களுக்கான டீட்டி ஊசியை மட்டும் செலுத்திவிட்டு, இயல்பான நாட்களை போன்றே பணிக்கு சென்று வந்துள்ளார். 

அச்சமயத்தில் பாலமுருகனின் தந்தைக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவருக்கு உதவியாக மருத்துவமனையில் இருந்துவந்ததோடு, வேலைக்கும் சென்றுவந்துள்ளார்.  தந்தைக்கு உடல்நிலை சரியான நிலையில், குடும்பத்தார்  பாலமுருகனுக்கு திருமணம் செய்வதற்காக வரன்பார்த்துவந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த வாரம் திடீரென பாலமுருகனுக்கு அடிக்கடி தலைவலி வருவதாக கூறியுள்ளார், மேலும் குடிக்க தண்ணீர் கொடுத்த போது தண்ணீரை பார்த்தும், காற்று வீசும் போதும், பயந்து விலகுவது போன்று செய்து வந்துள்ளார். இதையடுத்து அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், பாலமுருகனுக்கு  ரேபிஸ்  அறிகுறி இருப்பதாக கூறிய மருத்துவர்கள், அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைதுள்ளனர்.

இதனையடுத்து பாலமுருகனை நேற்றிரவு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர் அங்கு பாலமுருகனின் உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டதாக கூறி ரேபிஸ் நோய் சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். அப்போது பாலமுருகன் அதிக கூச்சலிட்டு கலாட்டா செய்து, அறையில் இருந்து  வெளியேற முயன்றுள்ளார். இதையடுத்து ரேபிஸால் பாதிக்கப்பட்ட பாலமுருகனை மருத்துவர்கள் அங்குள்ள தனி அறையில் வைத்துள்ளனர். 

அப்போது இரவு முழுவதும் காயத்தால் ஏற்பட்ட வலியாலும் மன உளைச்சலாலும் புலம்பியபடி அங்கும் இங்கும் ஓடியபடி, இருந்த இளைஞர் பாலமுருகன் அதிகாலையில், அறையில் இருந்த போர்வையால் கழுத்தில் இறுக்கி கட்டி தொங்கியபடி,  தூக்கிட்டு தற்கொலை செய்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

மருத்துவமனை செவிலியர்கள் அறைக்கு சென்று பார்த்தபோது பாலமுருகனின் உடலை பார்த்து அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர் அங்குவந்த அரசு ராஜாஜி மருத்துவமனை காவல்நிலைய காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வு அறைக்கு அனுப்பிவைத்தனர்.

பூனைக்கடித்ததை அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு ரேபிஸ் நோயால் மிகப்பெரிய உடல் நலக்குறைவு ஏற்பட்ட  இளைஞர் தனியாக சிகிச்சைக்காக, அடைக்கப்பட்ட அறையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலமுருகனின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் , பாலமுருகன் பூனை கடித்ததை கூட சொல்லாமல் இருந்துவிட்டதாகவும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து,அனுமதித்த சில மணி நேரத்திலயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால்,  மிகப்பெரிய அதிர்ச்சியில் உள்ளோம்.

அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது ரேபிஸ் நோய் இருப்பதாக பாலமுருகனிடம் கூறியதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் , பாலமுருனின் வருமானத்தை மட்டுமே நம்பி குடும்பத்தினர் இருந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். என குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com