“ரசிகர்களுக்கு கொண்டாட்டம்.. மக்களுக்கு திண்டாட்டம்” - எதுகை மோனையில் தவெக அரசை விளாசிய RB உதயகுமார்!

இந்த 80 நாட்களில் முதல்வர் விஜயின் மிகப்பெரிய சாதனை ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட்டதுதான்
RB udhayakumar
Published on
Updated on
1 min read

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக அரசியல் சூழல் மற்றும் தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பல்வேறு தடைகளைத் தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்து கடுமையான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “திரைப்படம் வெளியீட்டில் தமிழ்நாட்டில் மாபெரும் சரித்திர சாதனையை நிகழ்த்தி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக் காட்டியிருக்கிறார் முதல்வர் விஜய். ஆனால் ‘ஜனநாயகன்’ படம் வெளியானது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், தமிழ்நாட்டு மக்களுக்கு திண்டாட்டமாகவும், மாணவர்களுக்கு போராட்டமாகவும் மாறியுள்ளது” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தவெக அரசில் காவல்துறைக்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், பொதுமக்களின் பாதுகாப்பையும், திரைப்பட வெளியீட்டு பாதுகாப்பையும் ஒரே நேரத்தில் கையாள காவல்துறையினர் திணறி வருவதாக குற்றம்சாட்டினார். “தமிழக காவல்துறையில் 1.35 லட்சம் போலீசார் பணியாற்ற வேண்டிய நிலையில், தற்போது சுமார் 1.20 லட்சம் பேர் மட்டுமே பணியில் உள்ளனர். சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு படை உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற புதிய ஆட்கள் தேர்வு செய்யாமல், ஏற்கனவே பணியில் உள்ள காவலர்களையே மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்” என்றார்.

மேலும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கோயில் திருவிழாக்கள், விஐபி பாதுகாப்பு, நீதிமன்றப் பணிகள், ரோந்து உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் மேற்கொள்வதால் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பில் சிக்கல்கள் நிலவுவதாகவும், குறிப்பாக மகளிர் காவல் நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறையால் போக்சோ வழக்குகளை கையாளுவதிலும் சிரமம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வரவிருக்கும் 2026–27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில், தவெக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அறிவிப்புகள் இடம்பெறுமா, காவல்துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் அறிவிக்கப்படுமா என்பது மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளதாக அவர் கூறினார்.

முதல்வர் விஜயை விமர்சித்த ஆர்.பி. உதயகுமார், “80 நாட்களாக ஆட்சியில் இருந்தும் தமிழக மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை. அரிசி விலை உயர்வு, காவிரி நீர் பிரச்சினை, மேகதாது விவகாரம், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு போன்றவை இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆனால் இந்த 80 நாட்களில் முதல்வர் விஜயின் மிகப்பெரிய சாதனை ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வெளியிட்டதுதான்” என்று கடுமையாக சாடினார். மேலும், “ஒரு திரைப்படத்தைக் கூட முதல்வரான பிறகுதான் வெளியிட முடிகிறதா என்று கேள்வி கேட்டால், அதுவே ஜனநாயக விரோதம் என்று கூறப்படுகிறதா?” என்றும் கேள்வி எழுப்பிய அவர், தமிழக அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com