
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டவராயன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவருக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில் இளைய மகனான 20 வயதுடைய ஆதித்யா கோயம்பத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆதித்யா தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார், அந்த பெண்ணும் காதலை ஏற்று ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆதித்யாவிற்கு அவரது காதலிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண் ஆதித்யாவிடம் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக் கொண்டுள்ளார். இதனால் ஆதித்யா கடந்த சில மாதங்களாகவே சரிவர கல்லூரிக்கு செல்லாமல் வருத்தத்தில் இருந்து வந்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் “தனக்கு (ஆக 03) பிறந்தநாள் வர இருப்பதாகவும் ஆண்டு மட்டும் தனது காதலி தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாமல் இருந்தால் அன்றோடு எல்லாம் முடிந்தது நான் இறந்து விடுவேன்” என கூறியுள்ளார். வருத்தத்தில் பேசுவதாக இதனை நண்பர்கள் பெரியதாக எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஆதித்யா கடந்த வாரம் கல்லூரி விடுமுறைக்காக தனது சொந்த ஊரான திருப்பத்தூருக்கு வந்துள்ளார். அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 03 ஆம் தேதி வழக்கம் போல் ஆதித்யா தனது அன்றாட வேலைகளை செய்து கொண்டு சாதாரணமாக இருந்துள்ளார். மேலும் மாலை முழுவதும் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி விட்டு இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். ஆதித்யா எதிர் பார்த்தது போல அவருடைய காதலி ஆதித்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருந்துள்ளார், எனவே வருத்தமடைந்த ஆதித்யா வீட்டில் பெற்றோர்களிடம் வெளியில் சென்று வருவதாக சொல்லிவிட்டு வீட்டில் இருந்து சென்றுள்ளார்.
பின்னர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் ஆதித்யா வீட்டிற்கு அருகில் உள்ள இடங்களில் தேடி பார்த்துள்ளனர், அப்போது ஆதித்யா வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆதித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், கல்லூரி மாணவர் காதலி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.