அரசு வேலை: தமிழ் வழி படித்தவர்களுக்கு  இடஒதுக்கீடு - புதிய விதிமுறைகள்!

அரசாணையில் திருத்தம் செய்து தமிழக அரசுபுதிய அரசாணையை வெளியிட்டுள்ளது
tamil nadu
tamil nadu Admin
Published on
Updated on
2 min read

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணிகளில் நேரடி நியமனங்களுக்கான காலிப் பணியிடங்களில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் திருத்தம் செய்து தமிழக அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் வெளியிட்டுள்ள அரசாணையில், 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசுப் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அதன் 2020 ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின்படி, 1 ஆம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், பிற மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள் இந்த 20% முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதி பெற மாட்டார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

யாரெல்லாம் முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்?

புதிய அரசாணையின்படி, பின்வரும் நபர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை பெற தகுதியுடையவர்கள்:

1 ஆம் வகுப்பு முதல் அரசு வேலைக்கான வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரை தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்கள்.

ஒன்றாம் வகுப்பில் சேராமல், கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வயதின் அடிப்படையில் 2 முதல் 8 வரையிலான வகுப்புகளில் நேரடியாக பள்ளிகளில் சேர்ந்து தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து தேர்ச்சி பெற்றவர்கள்.

பிற மாநிலங்களில் தமிழ் மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்து, பின்னர் தமிழ்நாட்டில் தாங்கள் சேரும் வகுப்பில் இருந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவர்கள்.

பள்ளிக்குச் சென்று 10, 11, 12-ம் வகுப்பு தேர்வெழுதி, அதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாமல், தனித்தேர்வாக தேர்வு எழுதி அப்பாடங்களில் தேர்ச்சி பெற்று, தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றவர்கள்.

சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள்:

முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி வரை படித்த அனைத்து கல்வி நிலையங்களில் இருந்தும் தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ் பெற வேண்டும்.

1. பள்ளிக் கல்விக்கு: தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வழங்கும் சான்றிதழ்.

2. உயர் கல்விக்கு: தொழிற்பயிற்சி நிலையம், கல்லூரி, பல்கலைக்கழக முதல்வர் அல்லது பதிவாளர் வழங்கும் சான்றிதழ்.

இந்த சான்றிதழ்கள் தற்போது பணியில் உள்ள அதிகாரிகளால் மட்டுமே வழங்கப்பட வேண்டும். ஓய்வு பெற்ற அலுவலர்கள் வழங்கும் சான்றிதழ்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யார் தகுதியற்றவர்கள்?

பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக தனித் தேர்வர்களாக தமிழ் வழியில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த முன்னுரிமைக்கு தகுதி பெற மாட்டார்கள்.

தேர்வு முகமைகள் மற்றும் நியமன அதிகாரிகளுக்கான அறிவுறுத்தல்கள்:

சம்பந்தப்பட்ட பணியாளர் தேர்வு முகமைகள் மற்றும் பணி நியமன அதிகாரிகள், விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதிச் சான்று, மாற்றுச் சான்று, மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் அவர்கள் தமிழ் வழியில் கல்வி பயின்றதை உறுதி செய்ய வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் தமிழ் வழி கல்வி சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த பள்ளி, கல்லூரிகள் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

பள்ளிகள் மூடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்தும், கல்லூரிகள் மூடப்பட்டிருந்தால், அக்கல்லூரி முன்னர் இணைவு பெற்றிருந்த பல்கலைக்கழகப் பதிவாளரிடம் இருந்தும் தேர்வர்கள் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் உறுதி செய்ய இயலாத நிலையில், தேர்வர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களை நியமிக்கும்போது, தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அரசாணையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த 20 சதவீத முன்னுரிமை ஒதுக்கீடு, நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தேர்வு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதர நிலைகள்) பதவி வாரியாக கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று அந்த அரசாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட அரசாணை, அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி இருக்கும் தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com