

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். போன்ற முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முதுகலைப் படிப்புக்கான (நீட் பி.ஜி. 2025) கலந்தாய்வு அட்டவணை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவக் கலந்தாய்வுக் குழுமம் (MCC) இந்த முழுமையான அட்டவணையை mcc.nic.in என்ற தன்னுடைய வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவரும் தங்களது சேர்க்கையை உறுதி செய்ய இந்தத் தேதிகளைப் பார்த்து தயாராக வேண்டும்.
மருத்துவ அறிவியல் தேர்வுக்கான தேசிய வாரியம் வெளியிட்டிருக்கும் இந்த அட்டவணையின்படி, முதற்கட்டமாக, இடங்களின் விவரம் சரிபார்க்கும் பணி அக்டோபர் 23, 2025 அன்று முடிவடைந்தது. இந்த முதுகலைப் படிப்புகளின் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் மாநில ஒதுக்கீடு என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு நான்கு சுற்றுகளாகக் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் சுற்றிற்கான பதிவு செய்யும் மற்றும் கட்டணம் செலுத்தும் காலம் அக்டோபர் 17ஆம் நாள் தொடங்கி நவம்பர் 5ஆம் நாள் வரை நீடிக்கிறது.
மாணவர்கள் தங்களுக்குப் பிடித்தமான கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, விருப்பப் பட்டியலை உறுதியளிக்கும் செயல்முறை (Choice Filling and Locking) இன்று, அதாவது அக்டோபர் 28, 2025 அன்று தொடங்கி நவம்பர் 5ஆம் நாள் வரை நடக்கும். இதில், நவம்பர் 5ஆம் நாள் விருப்பங்களைத் தேர்வு செய்து உறுதியளிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.
இடங்களை ஒதுக்கும் செயல்முறை நவம்பர் 6ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடக்கும்.
முதல் சுற்றின் கலந்தாய்வு முடிவுகள் நவம்பர் 8ஆம் நாள் வெளியிடப்படும்.
இந்தச் சுற்றில் இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் நவம்பர் 9ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் தகவல் கொடுத்துச் சேர வேண்டும்.
கல்லூரிகள் மாணவர்களின் விவரம் சரிபார்க்கும் பணியை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 18ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
இரண்டாம் சுற்றிற்காக இடங்களின் விவரம் சரிபார்க்கும் பணி நவம்பர் 18, 2025 அன்று நடக்கும்.
இந்தச் சுற்றில் பதிவு செய்து கட்டணம் செலுத்துவதற்கான காலம் நவம்பர் 19ஆம் நாள் முதல் நவம்பர் 24ஆம் நாள் வரை ஆகும்.
விருப்பமான கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்து, உறுதி செய்யும் பணிகள் நவம்பர் 19ஆம் நாள் தொடங்கி நவம்பர் 24ஆம் நாள் முடிவடையும். (உறுதியளிக்கும் கடைசி நாள்: நவம்பர் 24).
இடங்களை ஒதுக்கும் செயல்முறை நவம்பர் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் நடக்கும்.
முடிவுகள் நவம்பர் 26ஆம் நாள் வெளியிடப்படும்.
இடம் கிடைத்த மாணவர்கள் நவம்பர் 27ஆம் நாள் முதல் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தரவுச் சரிபார்ப்பை டிசம்பர் 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் முடிக்கும்.
மூன்றாவது சுற்றின் இடங்களின் விவரம் சரிபார்க்கும் பணி டிசம்பர் 8, 2025 அன்று நடக்கும்.
பதிவு மற்றும் கட்டணம் செலுத்தும் காலம் டிசம்பர் 8 முதல் டிசம்பர் 14 வரை ஆகும்.
விருப்பங்களை நிரப்பி உறுதி செய்யும் நாட்கள் டிசம்பர் 9ஆம் நாள் முதல் டிசம்பர் 14ஆம் நாள் வரை ஆகும். (உறுதியளிக்கும் கடைசி நாள்: டிசம்பர் 14).
இடங்களை ஒதுக்கும் பணிகள் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் நடக்கும்.
முடிவுகள் டிசம்பர் 17ஆம் நாள் வெளியிடப்படும்.
இடம் ஒதுக்கப்பட்ட மாணவர்கள் டிசம்பர் 18ஆம் நாள் முதல் டிசம்பர் 26ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் விவரம் சரிபார்க்கும் பணியை டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் முடிக்கும்.
மூன்று சுற்றுகளுக்குப் பிறகு காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக இந்த நான்காவது சுற்று நடத்தப்படுகிறது. இதற்கான இடங்களின் விவரம் சரிபார்க்கும் பணி டிசம்பர் 29, 2025 அன்று நடக்கும்.
பதிவு மற்றும் கட்டணம் செலுத்தும் காலம் டிசம்பர் 30, 2025 தொடங்கி ஜனவரி 4, 2026 வரை ஆகும்.
விருப்பங்களை நிரப்பி உறுதி செய்யும் பணிகள் டிசம்பர் 30, 2025 தொடங்கி ஜனவரி 4, 2026 வரை நடக்கும். (உறுதியளிக்கும் கடைசி நாள்: ஜனவரி 4).
இடங்களை ஒதுக்கும் பணிகள் ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் நடக்கும்.
முடிவுகள் ஜனவரி 7, 2026 அன்று வெளியிடப்படும்.
இடம் கிடைத்த மாணவர்கள் ஜனவரி 8, 2026 முதல் ஜனவரி 15, 2026 வரை கல்லூரிகளில் சேர வேண்டும்.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு மொத்தம் நான்கு சுற்றுகளாக நடைபெறும். முதுகலைப் படிப்புகளில் உள்ள மொத்த இடங்களில் ஐம்பது விழுக்காடு (50%) அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சுகாதாரப் பணிகளின் தலைமை இயக்குநரகம் ஆன்லைன் (வலைதளம்) மூலம் கலந்தாய்வை நடத்துகிறது. நீட் முதுகலைப் படிப்பில் தகுதி பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைப் பெறத் தகுதியுடைய அனைத்து மாணவர்களும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
மருத்துவக் கலந்தாய்வுக் குழுவானது (MCC) பின்வரும் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான கலந்தாய்வை நடத்தும்:
எல்லா மாநிலங்களில் உள்ள 50% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள். (ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள இடங்கள் அவர்கள் ஒதுக்கீடு செய்யும் இடங்களைப் பொறுத்தது).
மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள 100% இடங்கள் (அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒதுக்கீடு இரண்டையும் சேர்த்து).
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உள்ள 100% இடங்கள்.
ஊழியர் அரசு காப்பீட்டுக் கழகத்தின் கீழ் வரும் கல்லூரிகளில் உள்ள 50% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்.
ராணுவ மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள அனைத்து முதுகலை இடங்கள் (இதில் பதிவு செய்தல் மட்டும் எம்.சி.சி. நடத்தும்).
வி.எம்.எம்.சி மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனை, ஏ.பி.வி.ஐ.எம்.எஸ் மற்றும் ஆர்.எம்.எல் மருத்துவமனை, இ.எஸ்.ஐ.சி நிறுவனம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள 50% அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் ஐ.பி. பல்கலைக்கழகத்தின் 50% இடங்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.