72-வது தேசிய விருதுகள்.. தனுஷ் இரட்டை சாதனை! இயக்குநர், நடிகர் என அசத்திய நடிப்பு அசுரன்

விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படத்திற்காக இரண்டு பிரிகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது..
72th National awards
Published on
Updated on
2 min read

2024-ம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகளில், இந்த ஆண்டும் தமிழ் திரையுலகம் பல முக்கிய பிரிவுகளில் விருதுகளை அள்ளி குவித்துள்ளது. குறிப்பாக நடிகர் தனுஷ், இயக்குநராகவும் நடிகராகவும் இரு வெவ்வேறு பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்று, தமிழ் சினிமாவின் பெருமையை தேசிய அளவில் மீண்டும் உயர்த்தியுள்ளார்.

இந்திய திரைப்பட உலகில் முக்கிய அங்கீகாரமாக தேசிய திரைப்பட விருதுகள் கருதப்படுகின்றன. திரைப்படத்தின் கலை, தொழில்நுட்பம், சமூகப் பொறுப்பு மற்றும் நடிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கொரோனா காலத்தால் விருது அறிவிப்புகளில் ஏற்பட்ட தாமதத்தைத் தொடர்ந்து தற்போது 2024-ம் ஆண்டுக்கான 72-வது தேசிய திரைப்பட விருதுகள் வெளியாகியுள்ளன.

இந்த விருதுகளில் அதிக தமிழ் திரைத்துறையில் அதிகம் கவனம் பெற்றவர் நடிகர் தனுஷ். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் அசுரத்தனமான நடிப்பிற்காக  சிறந்த நடிகருக்கான சிறப்பு தேசிய விருது தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'ஆடுகளம்' மற்றும் 'அசுரன்' ஆகிய படங்களுக்காக இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ள தனுஷ், தற்போது தனது தேசிய விருதுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளார். மேலும் தயாரிப்பாளராகவும் காக்கா முட்டை மற்றும் விசாரணை ஆகிய படங்கள் தேசிய விருதை பெற்று தந்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், தற்போது இயக்குநராகவும் தனுஷ் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அவர் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. முதல் முழுநீள வணிக இயக்குநர் முயற்சியிலேயே தேசிய விருதை வென்றிருப்பது தனுஷின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும், சிறந்த சமூக மற்றும் தேசிய நலன் சார்ந்த திரைப்படம் என்ற பிரிவிலும் 'கேப்டன் மில்லர்' தேர்வு செய்யப்பட்டிருப்பது அந்த திரைப்படத்திற்கு கிடைத்துள்ள மற்றொரு முக்கிய அங்கீகாரமாகும்.

அதையடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படமும் தேசிய விருதுகளில் முக்கிய இடம்பிடித்துள்ளது. இந்தப் படத்திற்காக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். அதேபோல், படத்தின் பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும், படத்தொகுப்பாளர் கலைவாணன் சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளனர். ஒரே திரைப்படம் மூன்று முக்கிய பிரிவுகளில் தேசிய அங்கீகாரம் பெற்றிருப்பது, 'அமரன்' படத்தின் தரத்தையும் தொழில்நுட்ப சிறப்பையும் உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மெய்யழகன்
மகாராஜா, மெய்யழகன்

கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படத்திற்கு சிறந்த ஒலிக்கலவை பிரிவில் சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்த 'மகாராஜா' திரைப்படத்திற்காக இரண்டு பிரிகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு, சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருதையும், சாச்சனா நமிதாஸுக்கு துணை நடிகைக்கான தேசிய விருதும்  அறிவிக்கப்ட்டுள்ளது.

தமிழ் சினிமாவைத் தாண்டி, தென்னிந்திய திரைப்படங்களும் இந்த ஆண்டின் தேசிய விருதுகளில் குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 'புஷ்பா 2' திரைப்படத்திற்காக ஷீத்தல் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றுள்ளதுடன், அந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி, சிறந்த திரைக்கதை வசனத்திற்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இந்த ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள், தமிழ் சினிமா தற்போது உள்ளடக்கம், தொழில்நுட்பம், இயக்கம் மற்றும் நடிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் தேசிய அளவில் வலுவான தடம் பதித்து வருவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com