“குரேஷியின் மனைவி காவல் நிலையத்தில் புகார்” - 11 சவரன் நகைகளை வாங்கிக் கொண்டு மோசடியா?.. சிக்கலில் காங்கிரஸ் பிரமுகர்!

நல்ல விலைக்கு விற்றுத் தருவார் என்றும் கூறி ரஞ்சன் குமாரின் செல்போன் எண்ணையும் பகிர்ந்ததாகத் தெரிகிறது...
Qureshi Wife Gold Fraud Complaint
Qureshi Wife Gold Fraud Complaint
Published on: 
Updated on: 
2 min read

சென்னையில் சின்னத்திரை நடிகர் குரேஷியின் மனைவியிடம் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் தங்க நகைகளைப் பெற்றுக்கொண்டு, ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.10 லட்சத்தைத் தராமல் ஏமாற்றியதாக காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகரின் மனைவி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்தவர் முகமது குரேஷி. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்.

தற்போது தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரிஸ்வானா சொந்தமாக அலங்காரப் பொருட்கள் தொடர்பான தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த (ஆக 28) ஆம் தேதி ரிஸ்வானாவுக்கு அவசரத் தேவைக்காக பணம் தேவைப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தன்னிடம் இருந்த 11 சவரன் தங்க நகைகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது நண்பர்கள் இடம்பெற்றிருந்த வாட்ஸ்அப் குழுவிலும் நகைகளை விற்பனை செய்வது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவைப் பார்த்த நண்பர் ஒருவர், காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமாரைத் தொடர்பு கொள்ளுமாறு ரிஸ்வானாவிடம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் நகைகளை நல்ல விலைக்கு விற்றுத் தருவார் என்றும் கூறி ரஞ்சன் குமாரின் செல்போன் எண்ணையும் பகிர்ந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து, ரஞ்சன் குமாரைத் தொடர்பு கொண்ட ரிஸ்வானா, தன்னிடம் உள்ள தங்க நகைகளை விற்றுத் தருமாறு கேட்டுள்ளார். அதன்படி, சுமார் ரூ.14 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

நகைகளைப் பெற்றுக்கொண்ட ரஞ்சன் குமார், அவற்றை விற்பனை செய்துவிட்டு ரிஸ்வானாவிடம் ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கியதாகவும், மீதமுள்ள ரூ.10 லட்சத்தைத் தராமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ரிஸ்வானா, பலமுறை ரஞ்சன் குமாரை நேரில் சந்தித்து மீதமுள்ள பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால், அவர் முறையாகப் பதிலளிக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வேறு வழியின்றி ரிஸ்வானா நேற்று(நவ 23) அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ரூ.14 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை விற்றுத் தருவதாகப் பெற்றுக்கொண்டு, ரூ.4 லட்சம் மட்டுமே கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.10 லட்சத்தைத் தராமல் ரஞ்சன் குமார் மோசடி செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் அண்ணாசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, புகாருக்கு உள்ளாகியுள்ள காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன் குமார், ஏற்கனவே ஜெம் வீரமணி தொடர்பான பாலியல் வழக்கு விவகாரத்திலும் சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சின்னத்திரை நடிகரின் மனைவி அளித்துள்ள பண மோசடி புகார் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்