“எனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கினேன்” - திரைக்குள் வந்த கானா.. தேவாவின் உருக்கமான கடைசி பேச்சு!

இதெல்லாம் ஒரு பாட்டா?’ என்று கேட்பார்கள். இளையராஜா, ரஹ்மான் ஆகிய இருவருக்கும் மத்தியில் எனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்க நினைத்தேன்
deva rip
Published on: 
Updated on: 
1 min read

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா, தனது 76 வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது இழப்புச் செய்தி திரையுலகினரையும் இசை ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் அவர் தனது அனுபவங்கள் குறித்துப் பேசியது தற்போது கவனம் பெற்று வருகிறது.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் செப்டம்பர் 25ஆம் தேதி வெளியான ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற வெற்றி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா. இந்த விழாவில்தான் தேவா கடைசியாக உரையாற்றியுள்ளார். அப்போது தனது திரையுலக அறிமுகம் மற்றும் அனுபவங்கள் குறித்து பேசியிருந்தார்.

அவர் பேசியதாவது: “நான் சினிமாவுக்கு வந்ததற்கு ஒரு கதை இருக்கிறது. நான் வந்த காலகட்டத்தில் இசைஞானி இளையராஜா கொடிகட்டிப் பறந்தார். இப்போதும் அவர்தான் அப்படியே இருக்கிறார். அதன்பிறகு தம்பி ஏ.ஆர். ரஹ்மான் வந்தார். ஒரு பக்கம் ராஜா சார், இன்னொரு பக்கம் ரஹ்மான். இரண்டு ஜாம்பவான்கள் இருக்கும்போது நமக்கென்று ஒரு முத்திரை வேண்டுமே! என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் ‘கானா பாடல்களை’ அறிமுகப்படுத்தினேன்.

அது சாதாரண விஷயம் இல்லை சார். அப்போது நிறைய பேர் என்னிடம், ‘என்ன சார் பாட்டு இது? என்ன பாட்டு? இதெல்லாம் ஒரு பாட்டா?’ என்று கேட்பார்கள். இளையராஜா, ரஹ்மான் ஆகிய இருவருக்கும் மத்தியில் எனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடிக்க நினைத்தேன். அப்போதுதான் கானாவைத் திரையுலகில் அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால், அவர்கள் இருவருக்கும் அந்த இசை வடிவம் பரிச்சயமில்லாத ஒன்று. எனக்கு அது தெரியும். ஏனென்றால், நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். கானா பாடல்களைத் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியது சாதாரண விஷயம் இல்லை. அந்தக் காலத்தில் அந்தப் பாடல்களை ‘பிளாட்பார்ம் சாங்’ என்று அழைப்பார்கள். அது சென்னையின் நாட்டுப்புற இசை வடிவம். நான்தான் அதை ‘கானா’ என்று மாற்றினேன்.

திரைப்படத்தை குறித்து பேசிய தேவா.. ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தைப் பார்த்த அனைவரும் திரையரங்குகளில் அழுதார்கள். கானா கலைஞர்களுக்குப் பாட்டுதான் எல்லாம். ஆரம்பத்தில் உழைக்கும் மக்களின் வலி தெரியாமல் இருக்க இந்த வகைப் பாடல்களைப் பாடினார்கள். பின்னர், அது ஒரு தொழிலாக மாறியது. கானா பாடகர்கள் வித்தியாசமான உடல் அமைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால், குழந்தை மனம் கொண்டவர்கள். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் பாடுவார்கள். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com