

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு "தர்மன்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்தின் இந்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பது குறித்து நீண்ட நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆரம்பத்தில் இயக்குநர் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவார் என கூறப்பட்டது. பின்னர் சிபி சக்கரவர்த்தியின் பெயரும் அடிபட்டது. ஆனால் இறுதியில் "ஓ மை கடவுளே" மற்றும் "டிராகன்" திரைப்படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து இந்த முக்கிய வாய்ப்பை பெற்றுள்ளார்.
"தர்மன்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆக்ஷன் தோற்றத்தில் காணப்படும் ரஜினிகாந்த், கையில் கத்தி ஏந்தியபடி முகத்தில் சிறு புன்னகையுடன் அவருக்கு உரிய ஸ்டைலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படம் அதிரடி மற்றும் உணர்ச்சிகள் கலந்த கதைக்களத்தில் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே "பேட்ட" திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்த சிம்ரன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் திரையை பகிர உள்ளனர்.
மேலும், நடிகை ராஷி கன்னாவும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக இணைந்துள்ளார். அவரது கதாபாத்திரம் குறித்து படக்குழு இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை என்றாலும், கதையின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் - அனிருத் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், "தர்மன்" படத்தின் இசை மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் பெயர் வெளியிட்டு விழா இன்று காலை நடத்த நிலையில் அதில் பேசிய ரஜினிகாந்த் “நான் பேசினாலே பிராப்ளம் தான், ஒன்னு எனக்கு பிராப்ளம் இல்ல மத்தவங்களுக்கு பிராப்ளம்.
இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய போது கமல் சார் சொன்னார் இங்கு நீங்க ஒரு திரைப்படம் பண்ணனும்.. அதுக்கு அப்புறம் ரெண்டு பெரும் வேலைகளில் பிசி ஆகிட்டோம். அது இப்போ நடந்து இருக்கு.. பல இயக்குனர்கள் மாறி இப்போது அஷ்வத் மாரிமுத்து இந்த கதையை இயக்கியுள்ளார். இதில் பெரிய சிக்கல் கமல் தான் கதை கேட்க மாட்டேன் எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு.. நான் ரொம்ப வற்புறுத்தியாக பிறகு தான் கதையை கேட்டார்.. எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பு உங்களுக்கே தெரியும் பல உதவிகளை செய்திருக்கிறார். ஒரு நல்ல என்டர்டைமென்ட் உடன் ஒரு திரில்லர் படமா இது இருக்கும்” என கூறினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.