நடிகை ராஷ்மிகா மந்தனா, அடுத்த ஆண்டு முழுவதும் 400 குடும்பங்களைத் தத்தெடுத்து, ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் அவர்களின் மளிகைப் பொருட்கள் செலவை ஏற்க முன்வந்துள்ளதாக அறிவித்துள்ளார். மற்றவர்களையும் இதுபோன்ற சிறிய நற்செயல்களைச் செய்ய ஊக்குவிப்பதற்காகவே இந்தச் செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதாகவும் ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தற்போது சமூக ஊடகத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், இந்த முன்னெடுப்பை எடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ள நிலையில், அதன் முதல் முயற்சியாக 400 குடும்பங்களை அவர் தத்தெடுத்து அவர்களது வீட்டின் மளிகை செலவினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்திற்கு, 'அன்னபூர்ணா திட்டம்' என்றும் அவர் பெயரிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ரணபாலி' திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் ராஷ்மிகா, தனது கதாபாத்திரமான ஜெயம்மா, மற்றவர்களுக்கு உதவும் விருப்பம் உட்பட பல குணாதிசயங்கள், தன்னுடன் ஒத்து போவதாக ராஷ்மிகாதெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்களை இதற்கு முன்புவரை தனிப்பட்ட முறையில் வைத்திருந்ததாகவும், ஆனால் இது தனது ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்ற நம்பிக்கையில் இதைப் பற்றிப் பேச முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்மிகா தனது சமூகவலைதளப்பக்கத்தில், "நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் உங்களைப் பாதிக்கும் ஏதோ ஒன்று இருக்கிறது.. உங்களில் பலர் எனக்கும் ஜெயம்மாவுக்கும் இடையே ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளதா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள், அதற்கு என் பதில் 'ஆம்' என்பதுதான். இதுவும் அவற்றில் ஒன்று.. இது எப்போதுமே நான்தான், இதுவும் அவள்தான்.. நீங்கள் என் மீது காட்டும் அத்தனை அன்புக்காகவும் நான் எப்போதும் இது போன்ற விஷயங்களைச் செய்துகொண்டே இருப்பேன்.. ஆனால், இதை நான் மட்டும் தெரிந்துகொண்டால், என் குழுவினருக்கு மட்டும் தெரிந்தால், எங்களில் ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைத்ததால், இதை எப்போதும் ரகசியமாகவே வைத்திருந்தேன்.. ஆனால் இப்போது நான் இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறேன், ஏனென்றால், அன்பானவர்களே, இது போன்ற எதையாவது செய்ய இது உங்களை ஊக்குவித்தால், நான் மகிழ்ச்சியடைவேன் என்று நினைக்கிறேன். அதனால், ஏன் இப்போது இதிலிருந்து தொடங்கக்கூடாது என்று நினைத்தேன்!.
நான் இன்று 400 குடும்பங்களைத் தத்தெடுத்துள்ளேன்.. மேலும், ஒவ்வொரு முறையும் 400 குடும்பங்களுக்கு, தலா 3 மாதங்களுக்கு உதவ விரும்புகிறேன். இதை அடுத்த ஒரு வருடத்திற்குத் தொடர வேண்டும். இதன் மூலம் அவர்கள் மளிகைப் பொருட்களுக்காகச் செலவிடும் பணத்தைச் சேமித்து, தங்கள் எதிர்காலத்தைச் சிறப்பாகத் திட்டமிட முடியும் என்று நம்புகிறேன். ஒரு சிறிய கருணைச் செயல் கூட ஒருவரின் வாழ்க்கையை மாற்றும், அது பெரியதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.. நாம் அனைவரும் சிறிய ஒன்றிலிருந்து தொடங்குவோம்!. என்னை நம்புங்கள், கடந்த பல ஆண்டுகளாக நான் அனுபவித்த தூக்கமில்லாத இரவுகள், காயங்கள், போராட்டங்கள், வலி, கண்ணீர் என எல்லாவற்றிற்கும் ஈடாக இந்தப் புன்னகைகள் மதிப்புமிக்கவை.. இது விலைமதிப்பற்றது!!", என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிக மந்தனா ஆகியோர் இணைந்து நடித்து வெளியாகவுள்ள 'ரணபாலி' திரைப்படமானது 1870-களின் தென்னிந்தியாவில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒன்றான 1876-78-ஆம் ஆண்டு நடந்த பெரும் மெட்ராஸ் பஞ்சத்திலிருந்து இது தொடங்குவதாக தகவல்களை வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.