"அற்புதமான நடிகை.. என்னால் இன்னும் மறக்க முடியவில்லை" - ஆஸ்கர் நாயகனையே வியக்கவைத்த சாச்சனா.. மகாராஜா படத்துக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு!

ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்த திரைப்படம், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகும் பலரது கவனத்தை ஈர்த்தது
Sachana Namidass
Published on: 
Updated on: 
2 min read

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாம் ஹாங்க்ஸ், விஜய் சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை சாச்சனா நமிதாஸ, "அற்புதமான நடிகை" என்று குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.

'அப்பல்லோ 13', 'சேவிங் பிரைவேட் ரயன்', 'காஸ்ட் அவே', 'ஃபாரஸ்ட் கம்ப்', 'டாய் ஸ்டோரி', 'தி டெர்மினல்' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் டாம் ஹாங்க்ஸ். இவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை 'பிலடெல்பியா' (1993), 'ஃபாரஸ்ட் கம்ப்' (1994) ஆகிய படங்களுக்காகத் தொடர்ந்து இரண்டு முறை வென்றுள்ளார்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான 'மகாராஜா' படத்தைப் பார்த்த டாம் ஹாங்க்ஸ், அதில் நடித்த சாச்சனா நமிதாஸின் நடிப்பு வியக்கவைத்ததாக குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். 

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான இப்படம், ஒரு குப்பைத்தொட்டியை மையமாகக் கொண்டு உருவான திரில்லர் திரைப்படமாகும். எதிர்பாராத கிளைமாக்ஸ் கட்சிகளால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்த இந்த திரைப்படம், ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகும் பலரது கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து சீன மொழியில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Sachana Namidass

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்துள்ளார் சாச்சனா நமிதாஸ். இவருக்கு நடக்கும் ஒரு அநீதியை மையமாக வைத்து நகரும் கதையில் , யார் குற்றவாளி..? அவர்கள் தண்டிக்கப்படுகிறார்களா? என்பது தான் கிளைமாக்ஸ். மேலும் மகாராஜா திரைப்படத்தில் நடித்ததற்காக 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார் சாச்சனா. 

அதைத்தொடர்ந்து பிரபலமான ரியாலிட்டி ஷோவான ‘பிக் பாஸ்’ தமிழில் சீசன் 8-ல் பங்கேற்றார். தற்போது மாஸ் பசங்க vs கிளாஸ் பொண்ணுங்க என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சாச்சனா வெளிப்படுத்திய நடிப்பு ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸை வெகுவாகப் பாதித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் பாராட்டியதும் தற்போது கவனம் பெற்றுள்ளது. "என்னால் இன்னும் அந்தப் பெண்ணின் நடிப்பிலிருந்து வெளியே வர முடியவில்லை. என்ன ஒரு அசாதாரணமான நடிகை… என்னால் அதைச் செய்ய முடியும் என்று தோன்றவில்லை, நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பேன்" என்று  டாம் ஹாங்க்ஸ் வியந்து பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு தமிழ் திரைப்படத்தின் நடிப்பும் உணர்வுப்பூர்வமான கிளைமாக்ஸும் ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நட்சத்திரம் ஒருவரின் கவனத்தை ஈர்த்திருப்பது 'மகாராஜா' படக்குழுவினருக்கும், நடிகை சச்சனாவுக்கும் கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.