"பேயே இல்லாமல் இப்படியொரு படமா?.. தூங்க விடாமல் ஒலிக்கும் தாலாட்டு பாடல்" சென்சார் போர்டையே கதிகலங்க வைத்த '418' ஹாரர் திரைப்படம்!

படத்தின் முதல் பாதியில் அந்த கட்டிடத்தில் என்ன நடந்தது?, ஏன் அந்த '418' அறைக்குள் செல்லக்கூடாது? எனபதுபோன்ற பல கேள்விகளை சுமந்து நிற்கிறது. அதற்கான பதிலாக இரண்டாம் பாதியில் இயக்குநர் விளக்கத்தினை கொடுத்துள்ளார்.
AI Image - 418 movie review
AI Image - 418 movie review
Published on: 
Updated on: 
3 min read

கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, தற்போது OTT-க்குள் நவம்பர் 20ம் தேதி எண்டரி கொடுத்திருக்கும் திரைப்படம்தான் '418'. இதை பார்த்ததுமே ஓரளவிற்கு கணித்திருப்பீர்கள் இது ஒரு அறையின் எண் என்று, சரிதானே?. ஆம்! இது ஒரு அறையின் எண்தான். தெலுங்கில் உருவாகி தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 'நெட்ஃபிளிக்ஸ்' தளத்தில் கிடைக்கிறது.

திரைப்படம் ஒரு முன்னோட்டம்:

நவீன் யெர்னேனி மற்றும் யலமஞ்சிலி ரவி சங்கர் தயாரிப்பில், கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் '418'. இசையமைப்பாளர் வெங்கீ ஜிஜி இசையில், ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன் கைவண்ணத்தில் இந்த திரைப்படம் வெளியானது.

KGF தொடர் மற்றும் சலார் போன்ற படங்களில் உதவி மற்றும் இரண்டாம் யூனிட் இயக்குநராக பணியாற்றிய அறிமுக இயக்குநர்தான் கீர்த்தன் நடகௌடா.

படத்தின் கதையாக, வெளியுலக தொடர்பே இல்லாமல் கிராமத்தில் இருக்கும் இருண்ட பக்கங்களை கொண்ட 'மருத்துவ ஆண்கள் விடுதி'. அதில் மற்றவர்கள் அந்த அறை பக்கமே செல்ல பயப்படும் அறைதான் '418'. அங்கு என்ன நடந்தது?. அந்த இடத்தில் புதைந்திருக்கும் அமானுஷ்யம் என்ன? அங்கு ஏன் பெண்கள் செல்லக்கூடாது ? என்பதுதான் திரைப்படத்தின் கதை.

திரைப்படமானது, கொரோனா காலத்தில் தொடங்குகிறது. அங்கு வரும் மாணவர்கள் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் மருத்துவ கல்லூரியில் படிக்க வருகின்றனர். அந்த கட்டிடமே ஒரு இருண்ட பக்கத்தினை சுமந்து நிற்பதுபோல் அமானுஷ்யம் நிறைந்து இருக்கிறது. அங்கு வரும் படத்தின் நாயகன் விவேக் சங்கர். தனக்கு நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளால் பாதிக்கப்படுகிறார் . மேலும்,அந்த கட்டிடத்தில் என்ன நடந்தது? என்பது குறித்து 'இன்வெஸ்டிகேட்' செய்ய புறப்படுகிறார். இது ஒருபுறம் இருக்க இளைஞர்களுக்கே உண்டான 'சொல்பேச்சை மீறல்' என்பது அங்கு நடக்கிறது. அதாவது, விவேக்கின் நண்பர்கள் அந்த '418' அறையில் என்ன இருக்கிறது? என்பதை பார்க்க செல்கின்றனர். அதுவும் கூட ஒரு பெண்ணோடு. பெண்களே வரக் கூடாது என்று இருக்கும் கல்லூரி விடுதிக்குள் எப்படி பெண்ணை அழைத்து சென்றார்கள்? அந்த அறை கதவை திறந்தார்களா? இல்லையா? அங்கு ஏன் பெண்கள் வரக் கூடாது? என்பதை சுவாரஸ்யமாக இயக்குநர் நகர்த்தி சென்றுள்ளார்.

படத்தின் முதல் பாதியில் அந்த கட்டிடத்தில் என்ன நடந்தது?, ஏன் அந்த '418' அறைக்குள் செல்லக்கூடாது? எனபதுபோன்ற பல கேள்விகளை சுமந்து நிற்கிறது. அதற்கான பதிலாக இரண்டாம் பாதியில் இயக்குநர் விளக்கத்தினை கொடுத்துள்ளார்.

கதையை கையாண்ட விதம்:

பொதுவாக திகில் திரைப்படம் என்றாலே மக்களை பயமுறுத்த முழுக்க முழுக்க பேய்களையும், திடீரென பயமுறுத்தும் அதே பழைய டெக்னிக்கை நம்பி இருக்காமல் அதில் கொஞ்சம் சைக்கோலஜி-யை கூட இயக்குநர் ஆங்காங்கே தெளித்துள்ளார். கதைக்குள் இயக்குநர் எடுத்துச்சென்ற விதம் அருமை. ஆங்காங்கே எழும் கேள்விகள், மர்மமான கொலுசு சத்தம், தாலாட்டு பாடல் என்று மெல்ல மெல்ல கேள்விகளுடனும், பயத்துடனும் கதைக்குள் அழைத்து செல்கிறார் இயக்குநர்.

மனநல காப்பகமாக இருந்த கட்டிடத்தை 'ஆண்கள் விடுதி'யாக மாற்றி, அதில் அறை எண்களான 417 மற்றும் 418 ஆகிய அறை எண்களை சுற்றிவரும் மர்மத்தையும் இயக்குநர் தெளிவாக கையாண்டுள்ளார்.

அதுவரை இதுதான் உண்மை என்று திரைப்படத்தின் நீளத்தினையும் பொறுத்துக்கொண்டு நாம் பொறுமையாக படம் பார்த்து கொண்டிருக்கும்போது அங்கு உடைகிறது ஒரு மர்மம். ஆம்! நாம் இதுவரை பார்த்தது, புரிந்துகொண்டது பொய் என்பதுபோல் அமைத்துள்ள காட்சி தரமாக இருந்தது. மூடநம்பிக்கையை நம்பும் கல்லூரி நிர்வாகம் 13ம் எண்ணை அமானுஷ்ய எண்ணாக பார்ப்பது, அதனால் ஏற்படும் குழப்பம் போன்றவற்றை இயக்குநர் நேர்த்தியாக நம்பும்படியாக கொடுத்துள்ளார்.

திரைப்படம் முழுக்க ஒரு இருண்ட பக்கத்தை சுமந்து செல்ல வைக்கும் ஒளிப்பதிவாளரின் வேலை சிறப்பாக இருந்தது. வாழ்க்கையில் முதல் முறையாக தாலாட்டு பாடலையே பயமுறுத்தும் பாடலாக கொடுத்தது மட்டுமின்றி, அவ்வப்போது வந்து செல்லும் கொலுசு சத்தம் ஆகியவற்றால் கதிகலங்க வைத்துள்ளார் இசையமைப்பாளர்.

நடிகர்களை பொறுத்தவரை, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். ஆனால், முதல் பாதியில் கதையை நகர்த்திய விவேக் இரண்டாம் பாதியில் "எங்கே போனார்?" என்று சிந்திக்கவைப்பதுபோல் தொலைந்துபோனது ஏமாற்றத்தை தருவதாக அமைந்தது. மேலும், 'பிளாஷ்பேக்' காட்சியில் வரும் சைத்ரா ஜே. ஆச்சார் தனது கதாபாத்திரத்தை மிகவும் அழகாக, நளினதுடன் சிறப்பாக செய்துள்ளார். அவரது குரலில் வரும் தாலாட்டு பாடலானது இரவில் கூட நம்மை யோசிக்கவைத்துத் தூங்கவிடாமல் செய்கிறது. மருத்துவ மாணவியாக வரும் ப்ரீதி பகடலா தனது கதாபாத்திரத்தை அழகாக, நேர்த்தியாக செய்துள்ளார். மேலும், திரைப்படத்தில் வரும் அனைவருமே நம்மை 'கன்வின்ஸ்' செய்யும் அளவிற்கு நடித்துள்ளனர்.

மேலும், திரைப்படத்தில் யட்சகானம், கொலுசொலி அல்லது சலங்கை ஒலி, மாந்திரிக அடையாளம் போன்ற பல குறியீடுகளை இயக்குநர் வைத்துள்ளார். குறிப்பாக, அந்த 'யட்சகானம்' நடனத்தை கொண்டே திரைப்படம் நகர்வதாக அமைத்திருப்பார் இயக்குநர். யட்சகானம் என்பது கர்நாடகாவின் கடலோரப் பகுதிகளில் தோன்றிப் புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டிய நாடகக் கலை ஆகும். இதுமட்டுமின்றி, திருமணமான பெண்கள் கட்டாயம் தாய்மை அடைந்திருக்க வேண்டும் இல்லையெனில் இந்த உலகம் அவர்களை எந்தவிதமான அழுத்தத்திற்கு கொண்டு செல்லும் என்பதை தேவிகா-வாக நடித்த சைத்ரா ஜெ. ஆச்சார் அழகாக காண்பித்திருப்பார்.

பிளஸ்.. மைனஸ்.. என்ன?

திரைப்படத்தில் அறைகளின் எண்களில் இயக்குநர் வைத்த ட்விஸ்ட் அருமை. இசையாக இருக்கட்டும், ஒளிப்பதிவாக இருக்கட்டும் இருவருமே படத்தினை இன்னும் ஒருபடி மேலே எடுத்து சென்றுள்ளனர் என்றுதான் கூறவேண்டும். ஆங்காங்கே பயத்தினை கொடுத்தது மட்டுமின்றி எந்த இடத்திலும் அடிக்கடி பேயை முன்னிறுத்தாமல் உளவியல் ரீதியாக கொண்டு சென்றது வித்தியாசமான அனுபவத்தை தந்தது. குறிப்பாக, இந்த திரைப்படத்தில் இசைதான் பேய் என்று கூறும் அளவிற்கு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். சைத்ரா ஜே. ஆச்சாரின் பயமுறுத்தும் தாலாட்டு பாடல், அவரது நளினம் மிகுந்த நடனம் போன்றவை இன்னும் படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்தது.

திரைப்படத்தின் மைனஸ் என்று கூறினால்,, திரைப்படத்தின் நீளம். 2 மணி நேரம் 28 நிமிடங்கள் ஓடிய இந்தத்திரைப்படம் 'எப்படா முடிப்பீங்க?' என்று உணரவைத்து விடுகிறது. மேலும், அதிகபடியான திகில் காட்சிகளால் முதலில் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை என்ற செய்தி வெளிவந்தது. இதுவே திரைப்படத்திற்கு ஒரு புரொமோஷனாகவும் அமைந்தது. சில திகில் காட்சிகள் மற்றும் பின்னணி இசையின் தீவிரம் குறைக்கப்பட்ட பிறகு, மறு ஆய்வு குழு சான்றிதழ் வழங்கியதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால், சில இடங்களில் பயம் வந்தாலும் கூட பல இடங்களில் பயத்தினை காட்சிகளாக இயக்குநர் தந்தாரா? என்று கேட்டால் இல்லை.

மொத்தத்தில் 'திரைப்படம் ஒர்த்தா..?' என்று கேட்டால், இரவு நேரத்தில் உங்கள் நண்பர்களோடு ஒருமுறை நெட்ஃபிளிக்ஸ்-ஸில் ஸ்பீக்கரை வைத்து பார்த்தால் பயத்தில் உறைந்து விடும் அளவிற்கு இருக்கும். இந்த இருண்ட வானிலையை கொண்ட நவம்பர் மாத மழைக்காலத்தினை இன்னும் அமானுஷ்யமான மாற்ற, கட்டாயமா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.

3.5/5

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.