

விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதியில் தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 9-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று, முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆனால், படத்தின் சென்சார் சான்றிதழ் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 9-ம் தேதி தான் வழங்கப்பட உள்ளது. இதனால் அதே நாளில் படம் வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், தீர்ப்பு வரும் 9-ம் தேதி காலையில் வழங்கப்பட்டாலும், அன்றைய தினமே படத்தை ரிலீஸ் செய்வது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார். ஒரு படத்தை வெளியிடத் தேவையான தொழில்நுட்பப் பணிகள் மற்றும் தியேட்டர்களுக்கான அனுமதி போன்றவை கிடைக்க நேரம் எடுக்கும். எனவே, 9-ம் தேதி தீர்ப்பு சாதகமாக வரும் பட்சத்தில், படம் 10-ம் தேதி வெளியாகவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் நிலை குறித்துப் பேசிய அவர், 9-ம் தேதி டிக்கெட் வாங்கியவர்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை என்று அறிவுறுத்தியுள்ளார். ஒருவேளை படம் ஒரு நாள் தள்ளிப்போனால், அதே டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி அடுத்த நாள் ரசிகர்கள் படத்தைப் பார்க்கலாம். 9-ம் தேதி டிக்கெட் வைத்திருப்பவர்கள் 10-ம் தேதியும், 10-ம் தேதிக்கு புக் செய்தவர்கள் 11-ம் தேதியும் என வரிசையாக தேதிகள் மாற்றியமைக்கப்படும். இப்படிச் செய்வதன் மூலம் தியேட்டர்களில் தேவையற்ற குழப்பங்கள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஜனவரி 10-ம் தேதி 'பராசக்தி' என்ற மற்றொரு திரைப்படமும் வெளியாகத் தயாராக உள்ளது. ஏற்கனவே 'ஜனநாயகன்' படத்திற்காக ஒதுக்கப்பட்ட திரைகள் மற்றும் நேரங்கள், ஒரு நாள் தள்ளிப் போகும்போது மற்ற படங்களின் காட்சிகளுடன் மோதும் சூழல் உருவாகும். சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், பல திரைகளைக் கொண்ட மல்டிபிளக்ஸ்களில் காட்சிகளை மாற்றி அமைப்பது மிகவும் கடினமான காரியம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளது. ரிலீஸ் தேதி மாற்றப்பட்டால், ரசிகர்களுக்கு டிக்கெட் தொகையைத் திரும்ப வழங்குவதா அல்லது காட்சிகளை மாற்றுவதா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கு முன்பு பைனான்ஸ் பிரச்சனைகளால் சில படங்கள் தள்ளிப்போனபோது ரீஃபண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்சார் காரணங்களால் ஒரு பெரிய நடிகரின் படம் ரிலீஸ் நேரத்தில் தள்ளிப்போவது இதுவே முதல் முறை என்பதால், தியேட்டர் நிர்வாகங்கள் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றன. 9-ம் தேதி வரும் கோர்ட் தீர்ப்பைப் பொறுத்தே ஜனநாயகன் படத்தின் எதிர்காலம் அமையும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.