உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு... - நடிகர் விஜய் சேதுபதி

தன் மீதான அவதூறு வழக்கு விசாரணையை தொடரலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு... - நடிகர் விஜய் சேதுபதி
Published on
Updated on
1 min read

டெல்லி: கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி  நடிகர் விஜய் சேதுபதியும், சைதாப்பேட்டையை சேர்ந்த துணை நடிகர் மகாகாந்தி என்பவரும் பெங்களூர் ஏர்போர்ட்டில் பரஸ்பரம் தாக்கி கொண்டனர். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மகா காந்தி என்பவர் விஜய் சேதுபதி தன்னை அவதூறாக பேசிவிட்டு, தன்னை தாக்கியதாகவும் கூறி அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த  சென்னை சைதப்பேட்டை 9வது குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கில் விஜய் சேதுபதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சம்மன் அனுப்பியது. இதனையடுத்து, சைதப்பேட்டை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு தடை கோரியும், தன்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் விஜய்சேதுபதி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு மீதான விசாரணையை நடத்தலாம், அந்த விசாரணையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என கடந்த ஜூலை 29ல்  உத்தரவிட்டது. அதேவேளையில் பெங்களூர் விமான நிலையத்தில் இருவரும் பரஸ்பரம் தாக்கி கொண்ட விவகாரம் தொடர்பானது, சென்னை விசாரணை எல்லைக்கு உட்பட்டது அல்ல! எனவே இங்கு வழக்கு தொடர இயலாது என தெரிவித்து விஜய் சேதுபதிக்கு எதிரான தாககுதல் புகாரை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, சைதப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் விஜய் சேதுபதிக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி நடிகர் விஜய் சேதுபதி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com