"53 ஆண்டுகள் அர்ப்பணிப்பு..." உலகின் சிறந்த 10 செவிலியர்களில் இடம்பிடித்த இந்தியாவின் 80 வயது நர்ஸ்!

உலகின் சிறந்த 10 செவிலியர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.
World’s top 10 nurses
World’s top 10 nursesWorld’s top 10 nurses
Published on
Updated on
2 min read

மருத்துவத் துறையில் மருத்துவர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு நோயாளிகளின் உயிரைக் காக்கும் பணியில் செவிலியர்களின் சேவையும் அளவிட முடியாதது. நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள், அவசர நேரங்களில் முதலில் உதவிக்கரம் நீட்டுபவர்கள், ஒரு குழந்தையின் முதல் அழுகையிலிருந்து முதியவரின் இறுதி சிகிச்சை வரை ஒவ்வொரு தருணத்திலும் துணை நிற்பவர்கள் செவிலியர்களே. அப்படிப்பட்ட அர்ப்பணிப்பான சேவையை ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக செய்து வரும் இந்தியாவின் 80 வயது செவிலியரான ஹிந்தும்பி கௌரம் கக்கடா (Hindumbi Kaurom Kakkada), உலகின் சிறந்த 10 செவிலியர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது.

லக்ஷத்தீவின் காவரத்தி அரசு இந்திரா காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஹிந்தும்பி, கடந்த 53 ஆண்டுகளாக இடைவிடாமல் மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகும், வெறும் மூன்று மாதங்களிலேயே ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணிக்குத் திரும்பினார். இன்று 80 வயதாகியும், தினமும் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிகளை கவனித்து வருகிறார். அவருடைய இந்த அர்ப்பணிப்பே, 214 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலிருந்து வந்த 1.34 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளில் இருந்து, உலகின் சிறந்த 10 செவிலியர்களுக்கான Aster Guardians Global Nursing Award 2026 இறுதிப் பட்டியலில் இடம் பெறச் செய்துள்ளது.

ஹிந்தும்பியின் மருத்துவப் பயணம் 1972-ல் தொடங்கியது. அப்போது லக்ஷத்தீவில் இன்றைய அளவுக்கு மருத்துவ வசதிகள் இல்லை. மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படும். மருந்துகள் படகு மூலம் மட்டுமே வந்து சேரும். ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல மருத்துவ ஆம்புலன்ஸ் கூட இல்லாத காலம் அது. பல நேரங்களில் மீனவர் படகுகளே உயிர் காக்கும் வாகனங்களாக மாறியுள்ளன. அந்தச் சூழ்நிலைகளிலும் அவர் தனது சேவையை நிறுத்தவில்லை. மாறாக, எந்த வசதியும் இல்லாத இடங்களில் கூட நோயாளிகளை காப்பாற்ற புதிய வழிகளைத் தேடி செயல்பட்டார்.

அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று அகத்தி தீவில் நடந்தது. கர்ப்பிணி பெண் ஒருவர் கடுமையான இரத்தப்போக்கால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்தத் தீவில் அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கும் வசதி இல்லை. உடனடியாக மீனவர் படகில் காவரத்திக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. சுமார் ஆறு மணி நேர கடல் பயணத்தின் போது, படகிலேயே ரத்தம் ஏற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் தாயும் குழந்தையும் உயிர் பிழைத்தனர். அந்த சம்பவத்தை நினைவு கூரும் ஹிந்தும்பி, "அந்த நாள் உயிரைக் காப்பாற்றுவதே எங்கள் ஒரே இலக்கு" என்று கூறியுள்ளார்.

மற்றொரு முறை, பருவமழை காலத்தில் அமினி தீவில் பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு உதவுவதற்காக கடற்படை கப்பலில் இரவு முழுவதும் பயணம் செய்து சென்றுள்ளார். அங்கு மிகவும் குறைவான மருத்துவ உபகரணங்களுடன், பிரசவத்தை வெற்றிகரமாக நடத்தி தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளார். மருத்துவ வசதிகள் குறைவாக இருந்தாலும், மன உறுதியும் சேவை மனப்பான்மையும் இருந்தால் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்பதை அவரது வாழ்க்கை நிரூபித்துள்ளது.

மருத்துவமனையில் மட்டும் அல்லாமல், சமூக சுகாதாரத்திலும் ஹிந்தும்பியின் பங்கு மிகப் பெரியது. கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனையில் பிரசவிக்க ஊக்குவித்தல், தடுப்பூசி விழிப்புணர்வு, சுகாதார கல்வி, வீடு தோறும் சென்று மருத்துவ ஆலோசனைகள் வழங்குதல் போன்ற பணிகளையும் அவர் தொடர்ந்து செய்துள்ளார். லக்ஷத்தீவில் காலரா பரவிய காலம், 2004 சுனாமி, கொரோனா தொற்று போன்ற பேரிடர் சூழல்களிலும் அவர் முன்களப் பணியாளராக செயல்பட்டார். பலருக்கு அவர் ஒரு செவிலியர் மட்டுமல்ல, குடும்ப உறுப்பினரைப் போன்ற நம்பிக்கையான முகமாக இருந்துள்ளார்.

இன்று லக்ஷத்தீவில் பலர், "எங்களை இந்த உலகிற்கு முதலில் கையில் ஏந்தியது ஹிந்தும்பிதான்" என்று பெருமையுடன் கூறுகிறார்கள். சிலருக்கு அவர் பிரசவத்தில் உதவியிருக்கிறார்; சிலரின் பெற்றோரைக் காப்பாற்றியிருக்கிறார்; இன்னும் சிலரின் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். ஒரே மனிதர் மூன்று தலைமுறையினரின் வாழ்க்கையிலும் இடம்பிடித்திருப்பது அரிதான விஷயம். அதனால் தான் லக்ஷத்தீவு மக்களுக்கு அவர் ஒரு செவிலியர் மட்டுமல்ல, நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளார்.

ஹிந்தும்பியின் சேவை ஏற்கனவே இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு, நாட்டின் உயரிய செவிலியர் விருதுகளில் ஒன்றான Florence Nightingale Award-ஐ இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றார். தற்போது உலகளாவிய அங்கீகாரமாக Aster Guardians Global Nursing Award இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது, அவரது சேவைக்கு கிடைத்த மற்றொரு மிகப்பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. இந்த விருதின் வெற்றியாளருக்கு 2.5 லட்சம் அமெரிக்க டாலர் (USD 250,000) பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.

ஹிந்தும்பியின் வாழ்க்கையில் இன்னொரு சிறப்பும் உள்ளது. அவரது தந்தை இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையிலும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. சமூக சேவை என்ற எண்ணத்தை தனது தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டதாக ஹிந்தும்பி பல பேட்டிகளில் தெரிவித்துள்ளார். அதனால் தான், வெளிநாட்டில் பணிபுரிந்த வாய்ப்பு இருந்தபோதும், தனது சொந்த ஊரான லக்ஷத்தீவுக்குத் திரும்பி அங்குள்ள மக்களுக்காகவே வாழ முடிவு செய்தார்.

"செவிலியர் பணி என்பது ஒரு வேலை அல்ல; அது ஒரு மனித உயிரைக் காப்பாற்றும் பொறுப்பு" என்ற அவரது எண்ணமே, இன்று அவரை உலகின் சிறந்த செவிலியர்களில் ஒருவராக உயர்த்தியுள்ளது. தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலும், கடினமான சூழ்நிலைகளிலும் சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து பணியாற்றிய அவரது வாழ்க்கை, இளம் மருத்துவ பணியாளர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com