இந்தியாவின் முக்கனிகளில் முதலாவதான மாம்பழங்களுக்கு உலகளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. குறிப்பாக அல்போன்சா, பங்காநபள்ளி போன்ற இந்திய மாம்பழ வகைகளை வெளிநாட்டினர் விரும்பி உண்பார்கள். ஆனால், சமீபகாலமாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகளின் (Pesticides) தாக்கம் இருப்பதாகக் கூறி சர்வதேச நாடுகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு ஜப்பான் அரசு இந்திய மாம்பழங்களின் இறக்குமதிக்குக் கடுமையான தடைகளை விதித்திருந்த நிலையில், தற்போது இந்தியாவின் அண்டை நாடான நேபாளமும் இந்திய மாம்பழங்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துள்ளது.
நேபாள நாட்டின் உணவுத் தரம் மற்றும் கட்டுப்பாட்டுத் துறை (DFTQC) நடத்திய ஆய்வில், இந்தியாவிலிருந்து கொண்டு வரப்படும் மாம்பழங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு அதிகமான ரசாயனங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மாம்பழங்களைச் செயற்கையான முறையில் பழுக்க வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 'கால்சியம் கார்பைடு' (Calcium Carbide) போன்ற நச்சுப் பொருட்கள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்குப் பலத்த தீங்குகளை விளைவிக்கக் கூடியவை. இந்த மாம்பழங்களை உண்பதால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் நீண்ட காலத்தில் புற்றுநோய் (Cancer) போன்ற கடுமையான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், பொதுமக்களின் நலன் கருதி இந்தத் தடையை விதிப்பதாக நேபாள அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குத் தினமும் டன் கணக்கில் மாம்பழங்கள் லாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். இந்தத் தடையின் காரணமாக, எல்லையில் நூற்றுக்கணக்கான மாம்பழ லாரிகள் தேங்கி நின்று அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய விவசாயிகளுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்திய மாம்பழங்களின் தரம் சர்வதேச அளவில் கேள்விக்குறியாக்கப்படுவது இது முதல் முறையல்ல; இதற்கு முன்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவின் சில விவசாயப் பொருட்களுக்குத் தடை விதித்திருந்தன. விவசாய விளைச்சலை அதிகப்படுத்தவும், சீக்கிரம் பழுக்க வைக்கவும் ரசாயனங்களை வாரி இறைக்கும் சில வியாபாரிகளின் பேராசையால், ஒட்டுமொத்த நாட்டின் பெயரும் சர்வதேச சந்தையில் கெட்டுப் போகிறது என்று சமூக ஆர்வம்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நேபாளத்தின் இந்த அதிரடி முடிவு இந்திய அரசுக்கும் ஒரு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) இந்த விவகாரத்தில் தலையிட்டு, மாம்பழங்களின் தரத்தை உறுதி செய்வதற்கான புதிய விதிமுறைகளை வகுக்கத் திட்டமிட்டு வருகிறது. இயற்கை விவசாய முறையில் விளையும் மாம்பழங்களுக்கு மட்டுமே ஏற்றுமதி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஜப்பானைத் தொடர்ந்து நேபாளமும் இந்திய மாம்பழங்களை நிராகரித்துள்ள இந்தச் சம்பவம், இந்திய விவசாயத் துறையில் தரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை உலகிற்கு உரக்கச் சொல்லியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.